வாக்குப்பதிவு இயந்திர சவால்: மார்க்சிஸ்ட், என்சிபி மட்டுமே விருப்பம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா? என்பதை நிரூபிப்பதற்காக, அரசியல்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா? என்பதை நிரூபிப்பதற்காக, அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட சவாலில் பங்கேங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆகியவை மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களுக்குப் பின்னர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கேள்வியெழுப்பின. இதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா? என்பதை நிரூபித்து காட்டுவதற்கு, அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, வரும் ஜூன் 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் பரிசோதித்து பார்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.
இதுதொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகளுக்கும், 49 மாநில கட்சிகளுக்கும் கடிதம் எழுதிய தேர்தல் ஆணையம், சவாலில் பங்கேற்பதற்கு வெள்ளிக்கிழமை மாலைக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், சவாலில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு, 7 கட்சிகள் மட்டுமே பதிலளித்துள்ளன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை சவாலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சவால் தொடர்பாக சில பிரச்னைகளை எழுப்பியுள்ளன. எனினும், சவாலில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
முன்னதாக, வாக்குப் பதிவு இயந்திரத்தின் முக்கிய பாகமான "மதர்போர்டில்' முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதா? என்பதை சோதித்துப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்திருந்தது. அதனை, தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com