வேட்பாளர்கள் இனி வருமானத்துக்கான ஆதாரங்களை தெரிவிக்க வேண்டும்: மத்திய அரசு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்போது, தங்களது வருமானத்துக்கும், தங்களது வாழ்க்கைத் துணையின் வருமானத்துக்குமான ஆதாரங்களை

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்போது, தங்களது வருமானத்துக்கும், தங்களது வாழ்க்கைத் துணையின் வருமானத்துக்குமான ஆதாரங்களை இனிமேல் தெரிவிக்க வேண்டிய வகையில் புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, தேர்தல் நடைமுறையில் மேலும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் மத்திய சட்டத் துறை அமைச்சகத்தை, தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அணுகியது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தங்களது வருமானம் மற்றும் தங்களது வாழ்க்கைத் துணையின் வருமானம் எப்படி வந்தது? என்பதை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வேட்பாளர்கள் இனி குறிப்பிட வேண்டும். முன்பிருந்த விதியின்படி, சுய சொத்துகள், வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 3 பேரின் சொத்துகள் குறித்த விவரங்களை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்; ஆனால், வருமானத்துக்கான ஆதாரங்களை காட்ட வேண்டியது இல்லை என்ற நிலை இருந்தது. இனிமேல், தங்களது வருமானம் மட்டுமன்றி, தங்களது வாழ்க்கைத் துணையின் வருமானமும் எந்த வழியில் வந்தது என்பதை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டியுள்ளது.
அத்துடன், தாங்கள் வேறெந்த அரசுப் பதவியும் வகிக்கவில்லை என்பதற்கான உறுதிமொழியையும் வேட்பாளர்கள் இனி அளிக்க வேண்டும். பொய்யான உறுதிமொழி அளிக்கும் வேட்பாளர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
ஏற்கெனவே அரசு பதவி வகித்து, அதில் ஊழல், பணிவின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளானவரா என்பதற்கான விளக்கத்தையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும், வேட்பாளர்கள் விரும்பினால், தங்களது மின்னஞ்சல், இதர சமூக வலைத் தள முகவரிகளையும் வேட்பு மனுவில் குறிப்பிடவும் புதிய விதிகள் அனுமதிக்கின்றன. இந்த விதிகள் குறித்த அறிவிக்கையை, மத்திய சட்டத் துறை அமைச்சகம் கடந்த மாதம் 7-ஆம் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com