இறுதிக் கட்டத்தில் இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்: இஸ்ரோ

இதுவரை இல்லாத அதிக எடைத் திறன் கொண்ட புதிய ராக்கெட்டை விண்ணில் ஏவ, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) இறுதிக்கட்ட தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிக் கட்டத்தில் இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்: இஸ்ரோ

இதுவரை இல்லாத அதிக எடைத் திறன் கொண்ட புதிய ராக்கெட்டை விண்ணில் ஏவ, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) இறுதிக்கட்ட தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 200 யானைகளின் எடை கொண்ட "ஜிஎஸ்எல்வி எம்கே-3' என்ற அந்த ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா உருவாக்கிய ராக்கெட்டுகளிலேயே மிக அதிக எடையைக் கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே-3, இதுவரை இல்லாத மிக அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களையும் சுமந்து செல்லக்கூடி சக்தி வாய்ந்தது. மிகக் குறைந்த விண்வெளி ஆய்வு நிறுவனங்களே துணிந்து களமிறங்கக் கூடிய, அதிக எடை கொண்ட ராக்கெட் பிரிவில் ஜிஎஸ்எல்வி எம்கே-3 மூலம் இஸ்ரோ தடம் பதித்துள்ளது.
விரைவில் விண்ணில் சீறிப் பாயத் தயாராகி வரும் இந்த ராக்கெட், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு ஏந்திச் செல்லும் திறன் கொண்ட முதல் ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி எம்கே-3 திகழும்.
அதிகபட்சமாக 8 டன் எடையை இந்த ராக்கெட்டால் சுமந்து செல்ல முடியும் என்பதால், இந்திய வீரர்களை விண்வெளிக்கு இட்டுச் செல்வது இந்த ராக்கெட்டுக்கு சுலபமாக இருக்கும்.
ஏற்கெனவே, 2 முதல் 3 வரையிலான விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ.19,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரை செலவாகும் எனத் தெரிகிறது.
இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தால், உடனடியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படத் தொடங்கும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய உலகின் 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும்.
ஏற்கெனவே, ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.
இந்தியா விண்வெளிக்கு அனுப்பும் முதல் நபர், ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று கூட இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
640 டன் எடையுடன், முழுமையான செயல்பாடு கொண்ட ஜிஸ்எல்வி எம்கே-3 ராக்கெட்டை பரிசோதனை முறையில் விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகளில் தற்போது இஸ்ரோ பொறியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த ராக்கெட் பரிசோதனைக்கு ரூ.300 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. இது மிகப் பெரிய தொகையாகத் தோன்றினாலும், இதன் வெற்றியின் மூலம் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் செலவு கணிசமாகக் குறையும் என்று கூறப்படுகிறது.
எனினும், இந்த வெற்றி மிக எளிதில் கிடைக்கும் என்று கூறிவிட முடியாது. இஸ்ரோ உருவாக்கிய ராக்கெட்டுகள் அடுத்தடுத்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டாலும், அவை முதல் பரிசோதனையில் பெரும்பாலும் தோல்வியையே கண்டுள்ளன. இந்த நிலவரத்தை மாற்றி, முதல் முயற்சியிலேயே ஜிஎஸ்எல்வி எம்கே-3 வெற்றியடையும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com