டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர்

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை புதன்கிழமைக்கு (மே 31) தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா, நரேஷ் ஆகியோரை தில்லி காவல்துறை குற்றப்பிரிவு தனிப்படையினர் கடந்த மாதம் கைது செய்தனர். போலீஸ் காவல் முடிவடைந்து அனைவரும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கக் கோரி சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனுவை தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் ஜாமீன் கோரி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமை சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தில்லி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரை தற்போதைய நிலையில் ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. சமூகத்தில் மிகப் பெரிய செல்வாக்கைக் கொண்டவராக டி.டி.வி.தினகரன் திகழ்கிறார். மேலும், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. மேலும், இவர்கள் மீதான குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையத்தின் புனிதத் தன்மைக்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாக உள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபர்களின் தொடர்புகள் மீதான விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது' என்று வாதிட்டார்.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தினகரன் தரப்பு வழக்குரைஞர் "நீதிமன்ற காவலில் தினகரனை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய நோக்கம் என்ன? நீதிமன்ற காவலில் ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் வைக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் உரையாடல் அடங்கிய குறுந்தகடு அடிப்படையில் இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வருகிறது. ஊழல் தடுப்புச் சட்டப்படி தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், அந்த அதிகாரிகள் யார்? என்பதை இதுவரை ஏன் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை? இதில் இருந்தே இந்த வழக்கு ஏதோ உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது' என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி, "இந்த வழக்கில் டி.டிவி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது வரும் புதன்கிழமை (மே 31) உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை இருவரின் நீதிமன்ற காவல் வரும் ஜூன் 12-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com