குஜராத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்: ராகுல் நம்பிக்கை

காங்கிரஸ் பக்கம் நியாயம் உள்ளதால் குஜராத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நம்பிக்கை தெரிவித்தார்.
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்: ராகுல் நம்பிக்கை

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 9, 14 தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 18-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல், குஜராத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

குஜராத்தில் உள்ள பார்தி தொகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த ராகுல் பேசியதாவது:

பாஜக மக்களுக்கான அரசு அல்ல. மாறாக 10 தொழிலதிபர்களுக்கான அரசாக விளங்குகிறது.

குஜராத்தில் இத்தனை ஆண்டுகால பாஜக ஆட்சியில் வறுமை, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, தனியார் கல்வியில் வியாபாரம், மருத்துவ வியாபாரம், நிலத்தில் ஊழல், தலித் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறைச் சம்பவங்கள் ஆகியவை மட்டும் தான் பிரதானமாக நடந்துள்ளது.

பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவை குறிப்பிடும்படியான தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு நானோ கார் திட்டத்தை ரூ. 33 ஆயிரம் கோடியில் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஆனால் நான் இங்குள்ள இந்த 10 நாட்களில் குஜராத் சாலைகளில் ஒரு நானோ காரைக் கூட பார்க்கவில்லை.

தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடியின் பிடியில் ராணுவம், அரசாங்கம், அதிகாரம் என்று அனைத்தும் உள்ளது. இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையில் நடைபெறும் போர். இதில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றிபெற்று தர்மத்தை நிலைநாட்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com