'பணமதிப்பிழப்பு நடவடிக்கை'- ராகுல் சுட்டிக்காட்டிய முன்னாள் ராணுவ வீரர் ஆதரவு!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக ராகுல் சுட்டிக்காட்டிய முன்னாள் ராணுவ வீரர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
'பணமதிப்பிழப்பு நடவடிக்கை'- ராகுல் சுட்டிக்காட்டிய முன்னாள் ராணுவ வீரர் ஆதரவு!

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்காரணமாக புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என ஒரே இரவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

கறுப்புப் பணத்தை மீட்கவும், பயங்கரவாத செயல்களை தடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவுபெற்றதை அடுத்து இந்த நாளை கறுப்புப் பண ஒழிப்பு நாளாக பாஜக அறிவித்துள்ளது. ஆனால், இது நாட்டின் கறுப்பு தினம் எனக் கூறி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தியது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வருத்தப்படுவது போன்ற புகைப்படத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 

சாமானியனின் ஒரு துளிக் கண்ணீர் கூட அரசுக்கு நல்லதல்ல. ஒருநாள் இந்த கண்ணீர் கடலாக மாறும் என்பது நினைவில் இருக்கட்டும் என்று அந்த புகைப்படத்துடன் தனது கருத்தையும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த முன்னாள் ராணுவ வீரர் நந்த லால் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த நடவடிக்கை காரணமாக நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்தப் புதிய ரூபாய் நோட்டுகள் எல்லாம் ரஷியாவில் உருவாக்கப்பட்டது. ஏனென்றால் அவர்கள் இந்தியாவின் நண்பர்கள். அமெரிக்கா எப்போதுமே பாகிஸ்தானின் நண்பன்.

இந்த நடவடிக்கை எடுத்தபோது எனக்கு சில இன்னல்கள் நேர்ந்தது. நான் இதனால் சிரமத்துக்கு ஆளாகினேன். ஆனால் சிறிது காலத்தில் எல்லாம் சரியாகிவிட்டது. நான் ஒரு ராணுவ வீரன் என்ற முறையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன். அதுமட்டுமல்ல அரசின் எந்த முடிவுக்கும் நான் உடன்படுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com