ரயான் பள்ளி மாணவன் கொலை: பீட்சா, சாக்லெட் கொடுத்து வாக்குமூலம் வாங்கிய சிபிஐ

குருகிராமில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் பிரதியுமன் தாக்கூர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அதே பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவனை சிபிஐ கைது செய்துள்ளது. 
ரயான் பள்ளி மாணவன் கொலை: பீட்சா, சாக்லெட் கொடுத்து வாக்குமூலம் வாங்கிய சிபிஐ


புது தில்லி: குருகிராமில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் பிரதியுமன் தாக்கூர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அதே பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவனை சிபிஐ கைது செய்துள்ளது. 

தேர்வுகள் தள்ளிப் போக வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதியுமன் தாக்கூரை அந்த மாணவன் கொலை செய்திருக்கக் கூடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பிரதியுமனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்ததாக அந்த பள்ளி பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் அசோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். 

போலீஸ் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

திடீர் திருப்பம்: இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவனை சிபிஐ கைது செய்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: மாணவன் கொலையில் ஏற்கெனவே கைதான அசோக் குமாருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால், வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. 

அதன்படி, சம்பவத்தன்று பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், அதே பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவன் உள்பட சந்தேகத்துக்கிடமான நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதுடன் அவர்களது செல்லிடப்பேசி அழைப்பு விவரங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. 

இதில், அந்த 11-ஆம் வகுப்பு மாணவன் மீதான சந்தேகம் ஏறத்தாழ உறுதியானது. இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டான்.

கொலைக்கான காரணம்: படிப்பில் மந்தமான அந்த மாணவன், பள்ளியில் நடைபெறவிருந்த தேர்வுகளும், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக் கூட்டமும் தள்ளிப் போக வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி வளாகத்தில் ஒரு கொலையை அரங்கேற்ற திட்டமிட்டு, பிரதியுமன் தாக்கூரை கொலை செய்திருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

11ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை நடத்தும் முன், அதிகாரிகள் அவனுக்கு மிகவும் பிடித்த பீட்சா, சான்ட்விட்ச், சாக்லெட் போன்றவற்றை வாங்கிக் கொடுத்தனர். பிறகு, அவனிடம் ஹாரி பாட்டர், இசை, விலை உயர்ந்த பைக்குகள் பற்றியும் அதிகாரிகள் பேச்சுக்கொடுத்து, அவனை நல்ல மனநிலையில் கொண்டு வந்தனர்.

அவனது பெற்றோர் முன்னிலையிலேயே அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

இது குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், சந்தேகிக்கப்படும் மாணவன், அதிகாரிகளிடம் எளிதாக பேச வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை நாங்கள் மேற்கொண்டோம். அப்போதுதான் அவன் அந்த குற்றம்குறித்து மனம் திறந்து பேசுவான் என்று எண்ணினோம். எங்கள் எண்ணம் பலித்தது. மாணவனும் தன் வாயைத் திறந்தான். உண்மையை ஒப்புக் கொண்டான் என்று தெரிவித்தார்.

வாக்குமூலம் அளித்த மாணவன், சிறுவனை கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியை குருகிராமில் உள்ள கடை ஒன்றில் இருந்து வாங்கியதாகக் கூறினார். அந்த கடையையும் அவன் அடையாளம் காட்டியுள்ளான்.

பெற்றோர் மறுப்பு: இதனிடையே, தங்களது மகன் அப்பாவி என்று கைதான மாணவனின் தந்தை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'சம்பவத்தன்று நாள் முழுவதும் பள்ளியில்தான் எனது மகன் இருந்தான். தேர்வுகளிலும் பங்கேற்றான். அவனது சீருடையில் ஒரு துளிகூட ரத்தக் கறை இல்லை' என்றார்.

பின்னடைவு: இந்த வழக்கில் அசோக் குமார்தான் குற்றவாளி என்று குருகிராம் காவல்துறையினர் உறுதியாக தெரிவித்த நிலையில், தற்போது 11-ஆம் வகுப்பு மாணவனை சிபிஐ கைது செய்துள்ளது. இது, காவல்துறையினருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும், சம்பந்தமே இல்லாமல் அசோக் குமார் மீது குற்றம்சாட்டிய காவல்துறையினர் மீது வழக்குத் தொடர, அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com