நிர்வாகத் திறன் இன்மையை மோடி அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்: ஜிஎஸ்டி விவகாரத்தில் ராகுல் கருத்து

நிர்வாகத் திறன் இன்மையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று
நிர்வாகத் திறன் இன்மையை மோடி அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்: ஜிஎஸ்டி விவகாரத்தில் ராகுல் கருத்து

நிர்வாகத் திறன் இன்மையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களை இன்னலுக்கு உள்ளாக்கும் கப்பார் சிங் (புகழ்பெற்ற ஷோலே படத்தின் வில்லன் கதாபாத்திரம்) வரிவிதிப்பை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரிவிதிப்பை விமர்சிக்கும் வகையில் ராகுல் காந்தி மீண்டும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 178 பொருள்கள் மீதான வரியானது 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதற்கு முன்பாக நடைபெற்ற கூட்டங்களிலும் வரிவிதிப்பு விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டன.
 மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஜிஎஸ்டி அமலாக்கத்தை திட்டமிடாமல் மேற்கொண்டதே இவ்வாறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அக்கட்சிகள் கருத்து வெளியிட்டுள்ளன.
 பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார். ஜிஎஸ்டி குறித்த தெளிவான நிலைப்பாடு அரசுக்கு இல்லை என்றும், ஜேட்லியை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 இந்த சூழலில், இதுதொடர்பாக சுட்டுரை (டுவிட்டர்) வாயிலாகக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அந்தப் பதிவுகளில் அவர் தெரிவித்திருப்பதாவது:
 ஜிஎஸ்டி எனும் கப்பார் சிங் வரியை அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது. அதன் மூலமாக நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை முடக்கவும் அனுமதிக்க மாட்டோம். மக்களைப் பாதிக்கும் வரிகளை நடைமுறைப்படுத்தி லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கவோ, அமைப்புசாரா தொழில்களை ஒடுக்கவோ நினைத்தால், அந்த எண்ணம் ஈடேறாது.
 நாட்டுக்கு தற்போது நேர்மையான எளிய வரிவிதிப்பே தேவை. அதை செயல்படுத்தாமல், எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதில் மட்டுமே மத்திய ஆட்சியாளர்கள் நேரத்தை விரயம் செய்யக் கூடாது.
 மத்திய அரசு மூன்று விஷயங்களை மட்டும் செய்தால் நல்லது. ஒன்று தங்களது நிர்வாகத் திறன் இன்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்; இரண்டாவதாக மக்கள் விரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்; கடைசியாக சாமானியர்களின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com