"பத்மாவதி' திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

"பத்மாவதி' திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
"பத்மாவதி' திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

"பத்மாவதி' திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
 பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பத்மாவதி' திரைப்படத்தில் ராஜபுத்திர வம்ச அரசியான ராணி பத்மாவதிக்கு எதிரான கருத்துகள்இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, அந்தப் படத்துக்கு சில தரப்பினர் எதிர்ப்பு வருகின்றனர்.
 இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சித்தராஜ் சிங் எம். சுடாசமா என்பவர் உள்ளிட்ட 12 பேர், பத்மாவதி பட விவகாரம் தொடர்பாக மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், "ராணி பத்மாவதி குறித்து தவறான தகவல் வெளியாகாமல் இருக்கும் வகையில், படக் கதையை ஆய்வு செய்ய வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்க வேண்டும்; அந்தப் படக்குழு ஆய்வு செய்து அறிக்கை தரும் வரையில், பத்மாவதி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
 இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பு, அதற்கு அனுமதிச் சான்றிதழ் அளிக்க திரைப்பட தணிக்கைத் துறை பின்பற்றுவதற்கு என்று ஏராளமான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன; அதன்படி, அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்த பிறகே, திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதிச் சான்றிதழ் அளித்து வருகிறது' என்று தெரிவித்தனர்.
 மேலும், பத்மாவதி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக்கோரி தொடுக்கப்பட்ட 12 மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 அலாகாபாத் உயர் நீதிமன்றமும் தலையிட மறுப்பு: இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில், காம்தா பிரசாத் சிங்கால் என்பவர் பத்மாவதி திரைப்படத்தில் பெண்கள் "சதி' (கணவர் இறந்ததும், விதவைப் பெண் தாமாக முன்வந்து உடலில் தீயிட்டு உயிர் துறக்கும் உடன்கட்டை ஏறும் நடைமுறை) எனும் நடைமுறையைக் கடைபிடிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனு தொடுத்திருந்தார். இந்த மனு, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இதில் தலையிட விரும்பவில்லை. திரைப்படத் தணிக்கைத் துறையிடம் இதுகுறித்து நீங்கள் முறையிடலாம்' என்றனர்.
 இந்நிலையில், பத்மாவதி திரைப்படம் தொடர்பான பிரச்னைகள், ஆட்சேபங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பது குறித்து ராஜஸ்தான் அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தத் தகவலை அந்த மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.
 பத்மாவதி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் பஜ்ரங் தளம் அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com