குருகிராம்: கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி சிபிஐ துன்புறுத்தியது - மாணவன் பல்டி

குருகிராமில் உள்ள ரயான் பள்ளியில் படித்த 2ம் வகுப்பு மாணவன் பிரதியுமான் தாகுரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி சிபிஐ தன்னை துன்புறுத்தியதாக +1 மாணவன் தனது வாக்குமூலத்தை மாற்றியுள்ளான்
குருகிராம்: கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி சிபிஐ துன்புறுத்தியது - மாணவன் பல்டி

குருகிராமில் உள்ள ரயான் பள்ளியில் படித்த 2ம் வகுப்பு மாணவன் பிரதியுமான் தாகுரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி சிபிஐ தன்னை துன்புறுத்தியதாக +1 மாணவன் தனது வாக்குமூலத்தை மாற்றியுள்ளான்

சிறார் நீதிமன்ற வாரியம் அமைத்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் முன்னிலையில் திங்கட்கிழமை வாக்குமூலம் அளித்த அந்த மாணவன், தன்னை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், கொலையை ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தியதாகக் கூறியுள்ளான் என்று ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லும்படி தன்னை அடித்துத் துன்புறுத்தி வாக்குமூலம் பெற்றதாகவும் மாணவன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்துக் கருத்துக் கூற சிபிஐ செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட மாணவன், நவம்பர் 22ம் தேதி வரை ஃபரிதாபாத்தில் உள்ள சிறார் கண்காணிப்பு மையத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதியுமான் கொலை வழக்கில், முக்கிய சாட்சிகளையும், தடயங்களையும் குருகிராம் காவல்துறை அழித்துள்ளது என்று சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பின்னணி: 

பள்ளியில் சிறுவன் பிரதியுமனை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக தனது தந்தை மற்றும் சில சாட்சிகள் முன்னிலையில் 11-ஆம் வகுப்பு மாணவன் கடந்த வாரம் ஒப்புக் கொண்டார். இத்தகவலை சிறார் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சிபிஐ தெரிவித்தது.

தில்லி அருகே குருகிராமில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் பிரதியுமன் தாக்கூர் (7) கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

பிரதியுமனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்ததாக அந்தப் பள்ளியின் பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் அசோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீஸ் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ விசாரணையில், வழக்கில் திடீர் திருப்பமாக அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்னர். பள்ளி வளாகத்தில் ஒரு கொலை நடந்தால், தேர்வுகள் தள்ளிப் போகும் என்ற நோக்கத்தில் பிரதியுமனை கொலை செய்ததாக அந்த மாணவர் ஒப்புக் கொண்டார். 

கொலை செய்த மாணவர், சிறார் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் சிறார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பிரதியுமனைக் கொலை செய்ததை தனது தந்தை, சில சாட்சிகள் முன்னிலையில் அந்த 11-ஆம் வகுப்பு மாணவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுது.  இதையடுத்து, அந்த மாணவரை 3 நாள் காவலில் வைத்து சிபிஐ விசாரிக்க சிறார் நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

அதே நேரத்தில் இந்தக் கொலையில் ஏற்கெனவே கைதான அசோக் குமாருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. கொலையுண்ட சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தடயமில்லை என்பதை சிபிஐ உறுதி செய்தது. 

சம்பவத்தன்று பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதே பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர் உள்பட சந்தேகத்துக்கிடமான நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதுடன் அவர்களது செல்லிடப்பேசி அழைப்பு விவரங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில், அந்த 11-ஆம் வகுப்பு மாணவர் மீதான சந்தேகம் உறுதியானது.

படிப்பில் ஆர்வமில்லாத அந்த மாணவன், பள்ளியில் நடைபெறவிருந்த தேர்வும், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பும் நடக்கக் கூடாது என்பதற்காக பள்ளியில் ஒரு கொலையை நடத்தத் திட்டமிட்டு, பிரதியுமனை கொலை செய்திருப்பதாக தெரிகிறது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com