26 ஆண்டுகளுக்குப் பிறகு.. பேரறிவாளனுக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு துருப்புச்சீட்டு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், விசாரணையின் போது அளித்த வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்ததை ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு.. பேரறிவாளனுக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு துருப்புச்சீட்டு

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்ததை ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி உச்ச நீதிமன்றத்தில்  ஒப்புக் கொண்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளுள் ஒருவரான தியாகராஜன் (ஓய்வு) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், 19 வயதாக இருந்த ஏ.ஜி. பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு பகுதியை தான் பதிவு செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். 

அதாவது,  அறிவு என்று அழைக்கப்படும் பேரறிவாளன், 9 வோல்டுகள் கொண்ட இரண்டு பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தபோது, அவை எதற்காக என்று தனக்குத் தெரியாது என்று கூறியிருந்ததை, தான் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது சேர்க்காமல் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பேட்டரிகள் எதற்காக வாங்கப்படுகிறது என்பது பேரறிவாளனுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால், வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது அதனை நான் விட்டுவிட்டேன். ஏன் என்றால், அதை பதிவு செய்தால், அது குற்றமிழைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் சாட்சியமாக மாறிவிடும். ஆனால் நான் பதிவு செய்வது குற்ற ஒப்புதல் வாக்குமூலம். எனவே ஒட்டுமொத்த வாக்குமூலமும் பயனற்றதாகப் போய்விடும் என்பதால் அந்த பகுதியை நீக்கிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது பயன்படுத்திய வெடிகுண்டுகளை இயக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை முடியும் வரை, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்குமாறு பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில், பேரறிவாளன் மீதான தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசிடம், 2 வார காலத்துக்குள் பதில் கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

ராமதாஸ் கருத்து

இந்த வழக்கு பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்ததை சிபிஐ முன்னாள் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பேரறிவாளன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு. சிறைக்கதவு நிரந்தரமாக திறக்கட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளன் பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியின் பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அதுதொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், 2 பேட்டரி வாங்கிக் கொடுத்தது தனக்கு தெரியாது என பேரறிவாளன் கூறியதைப் பதிவு செய்ய மறந்து விட்டதாகவும், அதுதொடர்பான மொழி பெயர்ப்பு பல அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

இதுவே தனது மகனுக்கு பாதி விடுதலை கிடைத்தது போல இருக்கிறது. பேரறிவாளன் வருகிற பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com