இந்திய-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் அடுத்த குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். 
இது தொடர்பாக பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசியான் -இந்தியா உச்சிமாநாட்டிலும், கிழக்காசியக் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் மோடி பேசியதாவது:
தீவிரவாதமும், பயங்கரவாதமும் இந்ததப் பிராந்தியம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவால்களாகும். அவற்றில் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் அடங்கும். பயங்கரவாதத்தை கூட்டாக எதிர்த்துப் போரிட அனைத்து நாடுகளும் கைகோர்த்துச் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதச் சிந்தனை பரவுவதையும் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமாகும். இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்து, தங்கு தடையற்ற விமானப் போக்குவரத்து ஆகியவற்றை இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். வடகொரியாவின் அணு ஆயுதப் பரவல் தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் நலன்களைப் பேணுவதற்கும், அது அமைதியான முறையில் வளர்ச்சியடைவதற்கும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆசியான் அமைப்புக்கு இந்தியா நிலையான ஆதரவை வழங்கும்.
இந்தப் பிராந்தியத்தில் கிழக்காசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய பங்கை ஆற்ற வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. இந்த அமைப்பு இனி வரும் ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெறுவதையும் நாங்கள் விரும்புகிறோம். இந்தப் பிராந்தியத்தில் அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டிருப்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.
உலக அளவில் பெரிய அளவில் பிளவுகள் ஏற்பட்டிருந்தபோது ஆசியான் அமைப்பு உருவானது. தற்போது அது நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறது. அந்த அமைப்பு அமைதி மற்றும் செழுமைக்கான அடையாளமாகத் திகழ்கிறது.
தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்தியக் குடியரசு தின விழாவுக்கும், அதற்கு முந்தைய தினம் நடைபெற உள்ள இந்திய-ஆசியான் நினைவு உச்சிமாநாட்டுக்கும் வருகை தருமாறு ஆசியான் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றார் மோடி.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்க மனப்பான்மை அதிகரித்து வருவது தொடர்பாக ஆசியான் நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து பிராந்தியப் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா தயாராக உள்ளது என்பதையே பிரதமர் சூசகமாகத் தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆசியான் அமைப்பில் 10 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தவிர, இந்தியா, ஜப்பான், சீனா, கொரியக் குடியரசு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளும் சேர்ந்து கிழக்காசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. 
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் கிழக்காசியக் கூட்டமைப்பு என்பது முதன்மையான அமைப்பாகத் திகழ்கிறது. கடந்த 2005-இல் உருவாக்கப்பட்டது முதல், கிழக்காசியாவில் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com