கஷ்ட காலத்தில் கடவுளை நினைக்கும் ராகுல், அகிலேஷ்: உ.பி. துணை முதல்வர் கிண்டல்

கஷ்ட காலம் வந்ததன் காரணமாகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் கடவுளின் நினைவு வந்ததாக அந்த மாநில துணை முதல்வர் கேசவ்

கஷ்ட காலம் வந்ததன் காரணமாகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் கடவுளின் நினைவு வந்ததாக அந்த மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளர்யா கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காகச் செல்லும் ராகுல் காந்தி, அங்கு பல்வேறு கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். இது ஹிந்துக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் தந்திரம் என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
இதுகுறித்து ராகுலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நான் ஒரு சிவ பக்தன். என்னைப் பற்றி பாஜகவினர் என்ன கூறினாலும் பரவாயில்லை. எனக்கு என்னைப் பற்றித் தெரியும்' என்று கூறினார்.
இதற்கிடையே, சமாஜவாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், தனது சொந்த ஊரான சய்ஃபயில் 50 அடி உயரமும், 60 டன் எடையும் கொண்ட பிரம்மாண்டமான கிருஷ்ணர் சிலையை அமைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, அந்த மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளர்யா, பரிலியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை தெரிவித்ததாவது:
ராகுல் காந்தி இப்போதெல்லாம் ஒரு ஹிந்துவைப் போல் பாசாங்கு செய்கிறார். மக்களால் புறக்கணிக்கப்பட்ட அகிலேஷ் யாதவ், தனது கஷ்ட காலத்தில் கடவுளை நினைக்கிறார்.
பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை மதிக்காதவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். அப்போது அவர்கள் 'ராமா', 'கிருஷ்ணா' என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இதுதவிர, அவர்கள் சிவன், பகவதித் தாய் ஆகிய தெய்வங்களையும் நினைக்கின்றனர்.
அகிலேஷ் யாதவுக்கு தற்போது கிருஷ்ணரின் நினைவு வந்துள்ளது. கூடிய விரைவில் அவர் ராமரின் பெயரையும் உச்சரிப்பார் என்றார் கேசவ் பிரசாத் மெளர்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com