சிறைச்சாலையில் ராம் ரஹீமுக்கு சிறப்புச் சலுகைகளா?: ஹரியாணா சிறைத்துறை டிஜிபி மறுப்பு

சிறைச்சாலையில் தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீமுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுவதாக வெளியான செய்திகளை ஹரியாணா மாநில சிறைத்துறை டிஜிபி கே.பி. சிங் மறுத்துள்ளார்.

சிறைச்சாலையில் தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீமுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுவதாக வெளியான செய்திகளை ஹரியாணா மாநில சிறைத்துறை டிஜிபி கே.பி. சிங் மறுத்துள்ளார்.
இதுகுறித்து கே.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் அடைக்கப்பட்டுள்ள சுனாரியா சிறையில் வாரந்தோறும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துகின்றனர். ராம் ரஹீம் சிங் அடைக்கப்பட்டிருக்கும் சிறை அறையிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதில் இதுவரை வித்தியாசமாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ராம் ரஹீம் சிங்குக்கு சிறப்புச் சலுகைகள் காட்டப்படுவதாக கூறப்படுவதில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அதில் எந்தவித உண்மையும் கிடையாது என்றார் கே.பி. சிங்.

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராம் ரஹீம் சிங், ரோத்தக் மாவட்டத்திலுள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அந்தச் சிறையில் இருந்து அண்மையில் ஜாமீனில் வெளி வந்த கைதி ஒருவர், சிறைச்சாலையில் ராம் ரஹீமுக்கு மிகவும் முக்கிய நபர்களுக்கு அளிக்கப்படுவது போல பல்வேறு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான செய்திகள், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com