சீனா, ஜப்பான் பிரதமர்களுடன் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில், சீனப் பிரதமர் லீ கெகியாங், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.
சீனா, ஜப்பான் பிரதமர்களுடன் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில், சீனப் பிரதமர் லீ கெகியாங், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாடு, கிழக்காசிய மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கு பெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். மணிலாவில் அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, மணிலாவில் கிழக்காசிய உச்சி மாநாட்டு நிகழ்ச்சியின் இடையே சீனப் பிரதமர் லீ கெகியாங்கை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இதேபோல், பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்த்தே அளித்த விருந்து நிகழ்ச்சியின்போதும் லீ கெகியாங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், 'இரு அண்டை நாடுகளும் மிகவும் ஆழ்ந்த ஆலோசனை நடத்தின; மணிலாவில் கிழக்காசிய மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், சீன பிரதமர் லீ கெகியாங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மணிலாவில் ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், 'எனது நண்பர் அபேயும், நானும் மணிலாவில் சந்தித்துப் பேசினோம்; இந்தியா-ஜப்பான் உறவுகளின் பல்வேறு அம்சங்களை நாங்கள் ஆய்வு செய்தோம். இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளையும், இரு நாட்டு மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்புகளையும் மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் பேசினோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், 'இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு வாய்ந்த ராஜீய உறவு, சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து தலைவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்' என்றார்.
ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை: ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லும், பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு குறித்து, பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், 'ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு புதிய சக்தியை அளித்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், 'இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது; பொருளாதாரம், பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
வியத்நாம், புரூனே, நியூஸிலாந்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை: இதேபோல், வியத்நாம் பிரதமர் நிகியன் சுவான் புக், புரூனே அரசர் ஹசனால் போல்கய், நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் ஆகியோருடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 
வியத்நாம் பிரதமருடனான சந்திப்பு குறித்து சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில், 'வியத்நாம் பிரதமரும், நானும் இந்திய-வியத்நாம் நட்புறவை அதிகரிப்பது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினோம். இதனால், இரு நாட்டு மக்களும், இப்பிராந்திய மக்களும் பயனடைவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிழக்காசிய உச்சி மாநாட்டின்போது சந்தித்துப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீனப் பிரதமர் லீ கெகியாங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com