பெண் பாலியல் பலாத்காரம் எதிரொலி: முக்கிய இடங்களில் மதுக் கடைகளை மூட ம.பி. முதல்வர் உத்தரவு

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து,

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, பள்ளிகள், மகளிர் விடுதிகள் போன்ற முக்கிய இடங்களின் அருகே அமைந்துள்ள மதுக் கடைகளை மூட அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் உத்தரவிட்டுள்ளார்.
போபாலில் 19 வயது பெண் ஒருவரை நான்கு பேர் கடந்த மாதம் 31-ஆம் தேதி கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர். அதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாரந்தோறும் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதாக முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் வாக்குறுதி அளித்தார்.
அதன்படி, முதல் ஆலோசனைக் கூட்டம் போபாலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாநில மக்கள் தொடர்புத் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மகளிர் விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் அருகே அமைந்துள்ள மதுக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் செளஹான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மதுக் கடைகளையொட்டி அமைந்துள்ள மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூடுமாறும், அனைத்து மகளிர் விடுதிகளின் முன்பும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
பள்ளிப் பேருந்துகளில் ஓட்டுநர்களின் நடத்தையைக் கண்காணிக்கும் வகையில் பெண் நடத்துநர் ஒருவரைக் கட்டாயம் நியமிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஆபாச வலைதளங்களின் ஆபத்துகள் குறித்து, சரியான தொடுதல் எது? தவறான தொடுதல் எது? என்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார் மக்கள் தொடர்பு அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com