வல்லபபாய் படேலின் மரபணு ஹார்திக்கிடம் உள்ளது: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை

சர்தார் வல்லபபாய் படேலின் மரபணு ஹார்திக் படேலிடம் கலந்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சக்திசிங் கோஹில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

சர்தார் வல்லபபாய் படேலின் மரபணு ஹார்திக் படேலிடம் கலந்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சக்திசிங் கோஹில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அவரது இந்தக் கூற்றுக்கு பாஜக தலைவர்களும், வல்லபபாய் படேல் குடும்பத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குஜராத் பேரவைத் தேர்தலையொட்டி, படேல் சமூக அமைப்பின் முக்கியத் தலைவரான ஹார்திக் படேலின் ஆதரவைப் பெற காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக அவர் முன்வைத்த நிபந்தனைகளையும் காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹார்திக் படேலின் ஆபாச விடியோ எனக் கூறப்படும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில் இந்த விவகாரம் தொடர்பாகக் கூறியதாவது:
ஹார்திக் படேல் சமூக அநீதிகளை எதிர்த்து தீர்க்கமாகப் போராடி வருபவர். கோடிக் கணக்கான ரூபாயைக் கொடுத்தும் அவரை பாஜக தலைவர் அமித் ஷாவால் விலைக்கு வாங்க முடியவில்லை. பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகும் ஹார்திக்கின் போர்க்குணம் ஓயவில்லை.
பிரிட்டன் ஆட்சியாளர்களால் மக்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்து இரும்பு மனிதர் வல்லபபாய் படேல் போராடினார். தற்போது படேல் சமூக மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ஹார்திக் போராடி வருகிறார். வல்லபபாய் படேலின் மரபணுவை ஹார்திக் படேல் தன்னகத்தே கொண்டுள்ளதையே இது காட்டுகிறது என்றார் அவர்.
சக்திசிங்கோஹிலின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், 'தேசத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்ட வல்லபபாய் படேலையும், பிரிவினையைத் தூண்டி வரும் ஹார்திக் படேலையும் ஒப்பிட்டுப் பேசுவது நாட்டுக்கே அவமானம்' என்றார்.
அதேபோன்று, வல்லபபாய் படேலின் குடும்பத்தினரும் சக்திசிங் கோஹிலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com