ஹிந்துத்துவத்தை எதிர்ப்பதன் மூலம் வளர்ச்சியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

ஹிந்துத்துவத்தை எதிர்ப்பதன் மூலம், எதிர்க்கட்சிகள் வளர்ச்சியையும், இந்தியர் என்ற உணர்வையும் எதிர்ப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
ஹிந்துத்துவத்தை எதிர்ப்பதன் மூலம் வளர்ச்சியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

ஹிந்துத்துவத்தை எதிர்ப்பதன் மூலம், எதிர்க்கட்சிகள் வளர்ச்சியையும், இந்தியர் என்ற உணர்வையும் எதிர்ப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு அவர் அயோத்தி நகரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு முன், லக்னௌவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 'யோகி ஆதித்யநாத்தின் பேச்சும், பணிகளும் ஹிந்துத்துவத்துடன் தொடர்புடையவை. அவை வளர்ச்சி சார்ந்தவை அல்ல' என்று எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து ஆதித்யநாத் கூறியதாவது: 
மதச்சார்பின்மை என்ற பெயரில் ஊழலில் ஈடுபட்டதோடு, ஜாதியவாதத்தையும் குடும்ப அரசியலையும் ஊக்குவித்த சக்திகள் தற்போது இவ்வாறு பேசுவது கேலிக்கூத்தானது. ஹிந்துத்துவம் என்பது எந்தவொரு மதம் அல்லது சமூகம் தொடர்புடைய வார்த்தை அல்ல. அது தேசியவாதம் தொடர்புடையது.
ஹிந்துத்துவமும், வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஹிந்துத்துவதத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் வளர்ச்சியையும், இந்தியர் என்ற உணர்வையும் எதிர்க்கின்றனர்.
இடாவா நகரில் மிகப்பெரிய கிருஷ்ணர் சிலையை அமைக்க முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. கிருஷ்ணர் சிலையைத் தவிர துரியோதனன் சிலையை அமைக்கவும் அவர் விரும்புகிறார். இது அகிலேஷ், இந்த மாநிலத்தை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது. அவர்களால் (சமாஜவாதி கட்சியினர்) தங்களது கலாசாரத்தைக் கைவிட முடியவில்லை. அதனால்தான் அவர்கள் துரியோதனனின் சிலையை அமைக்க உள்ளனர். 
வரும் 2019-இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தற்போது இந்த மாநிலத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும்.
நான் மதுரா நகரில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவேனா? என்று கேட்கிறீர்கள். ஏன் கொண்டாடக் கூடாது? பண்டிகைகளுடன் தொடர்புடைய இடங்கள் மீண்டும் தங்கள் பாரம்பரியப் பெருமையை அடைவது நமக்குக் கிடைக்கும் கௌரவம்.
அயோத்தி நகரை முந்தைய உத்தரப்பிரதேச அரசுகள் புறக்கணித்தன. அங்கு செல்வதற்கு மக்கள் பயந்தனர். ஆனால், தற்போது அயோத்தியை மேம்படுத்த பாஜக அரசு ரூ.137 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com