உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் இலவசமாக பசு மாடுகளை விநியோகிப்பதா? மேற்கு வங்க அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பசு மாடுகளை விநியோகிக்கும்

மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பசு மாடுகளை விநியோகிக்கும் திட்டத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் அந்த மாநிலத்தில் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பசு மாடுகளை விநியோகிக்கும் திட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது.
 இது மதவாத அரசியலை ஊக்குவிக்கும் நடவடிக்கை என்றும் பாஜகவுக்கு மறைமுகமாக உதவுவதற்காகவே திரிணமூல் அரசு இவ்வாறு செய்துள்ளதாகவும் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விமர்சித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அப்துல் மானன் கூறுகையில் "பஞ்சாயத்து தேர்தல் வரவுள்ள நிலையில், பசு மாடுகளை ஏன் விநியோகிக்க வேண்டும்? திரிணமூல் காங்கிரஸ் தனது பிரித்தாளும் அரசியல் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக கால்பதிக்க உதவுகிறது என்பதற்கு இது தெளிவான அடையாளமாகும். மாநிலத்தை எவ்வாறு மத ரீதியில் பிளவுபடுத்துவது என்பதில் திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் மறைமுக உடன்பாட்டை செய்து கொண்டுள்ளன' என்றார்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான முகமது சலீம் கூறுகையில், "நாடு முழுவதும் பாஜக நடத்தும் பசு அரசியலை இந்த மாநிலத்திலும் மேற்கொள்ள உதவுவதற்காக திரிணமூல் காங்கிரஸ் அரசு செய்யும் சதியே இத்திட்டம்' என்று தெரிவித்தார்.
 இதனிடையே, இலவச பசு மாடுகள் திட்டத்தை மேற்கு வங்க பாஜகவும் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவிக்கையில், "வளர்ச்சி அரசியலில் ஈடுபடுவதற்கு பதிலாக மக்களுக்கு சலுகைகளை அளிக்கும் அரசியலில் மாநில அரசு நம்பிக்கை கொண்டுள்ளது' என்றார்.
 எனினும், அரசின் முடிவை ஆதரித்து திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்தவரான மாநில கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்வபன் தேவ்நாத் கூறுகையில் "கிராமப்புறங்களில் பசு மாடுகளை விநியோகிப்பது அங்குள்ள குடும்பங்கள் பொருளாதார ரீதியில் தற்சார்பை எட்டவும், பால் உற்பத்தியைப் பெருக்கவும் உதவும்' என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com