முப்படை தளபதிகளை விட குறைவாக ஊதியம் பெறும் குடியரசுத் தலைவர்!

முப்படைகளின் தலைமை தளபதியாக கருதப்படும் குடியரசுத் தலைவர், அந்த முப்படைகளின் தளபதிகளைக் காட்டிலும் குறைவான ஊதியத்தை பெறும் தகவல் தெரிய வந்துள்ளது.
முப்படை தளபதிகளை விட குறைவாக ஊதியம் பெறும் குடியரசுத் தலைவர்!

முப்படைகளின் தலைமை தளபதியாக கருதப்படும் குடியரசுத் தலைவர், அந்த முப்படைகளின் தளபதிகளைக் காட்டிலும் குறைவான ஊதியத்தை பெறும் தகவல் தெரிய வந்துள்ளது.
 குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் தற்போது ரூ.1.50 லட்சமாகவும், குடியரசு துணைத் தலைவரின் மாத ஊதியம் ரூ.1.25 லட்சமாகவும், மாநில ஆளுநர்களின் ஊதியம் ரூ.1.10 லட்சமாகவும் உள்ளது. இந்நிலையில், 7ஆவது ஊதியக் குழு பரிந்துரை அமலானதையடுத்து, மத்திய அரசு அதிகாரிகள் பதவிகளில் மிகவும் உயரிய பதவியான மத்திய அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ.2.50 லட்சமாகவும், மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ.2.25 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. அதாவது, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மாநில ஆளுநர்களைக் காட்டிலும், மத்திய அமைச்சரவை செயலர், மத்திய அரசு செயலரின் ஊதியம் அதிகமாக உள்ளது.
 இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கும் குடியரசுத் தலைவரே தலைமைத் தளபதியாவார். ஆனால், இந்த முப்படைகளின் தளபதிகளின் ஊதியம், குடியரசுத் தலைவரின் ஊதியத்தை விட அதிகமாகும்.
 இதைக் கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள் ஆகியோரின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்து, அதை மத்திய அமைச்சரவை செயலகத்துக்கு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக கடந்த ஓராண்டுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளது. அந்தத் திட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள், முன்னாள் ஆளுநர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்த பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்தத் திட்டத்துக்கு இதுவரையிலும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை.
 இந்தத் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்காமல் ஏன் தாமதம் செய்கிறது? என்பதை அறிந்து கொள்வதற்காக, மத்திய அரசின் செய்தித் தொடர்பாளரை பிடிஐ செய்தியாளர் தொடர்பு கொண்டார். ஆனால், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
 ஒருவேளை மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை இந்தத் திட்டத்துக்கு உடனடியாக அளிக்கும்பட்சத்தில், அதுதொடர்பான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படும். அப்படி அந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாகவும், குடியரசு துணைத் தலைவரின் ஊதியம் ரூ.3.5 லட்சமாகவும், மாநில ஆளுநர்களின் ஊதியம் ரூ.3 லட்சமாகவும் உயரும்.
 குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரின் ஊதியம் கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்டது. அதாவது, குடியரசுத் தலைவரின் மாதாந்திர ஊதியம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சமாகவும், குடியரசு துணைத் தலைவரின் ஊதியம் ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.1.25 லட்சமாகவும், ஆளுநர்களின் ஊதியம் ரூ.36 ஆயிரத்திலிருந்து ரூ.1.10 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com