காங்கிரஸில் ஒரு குடும்பத்தினருக்கே தலைமைப் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது: பாஜக விமர்சனம்

காங்கிரஸ் கட்சியில், தலைமைப் பதவி என்பது ஒரே ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில், தலைமைப் பதவி என்பது ஒரே ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.
 காங்கிரஸ் தலைவர் பதவிக்கான அட்டவணைக்கு அக்கட்சியின் காரியக் கமிட்டி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவரான ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 காங்கிரஸில் வாக்குச்சாவடி நிலையிலான ஒரு அடிமட்டத் தொண்டர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக முடியுமா? அல்லது அந்தப் பதவி ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதா? குறைந்தபட்சம், அந்தப் பதவிக்கு தாம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று மாநில அளவிலான ஒரு தலைவராவது விரும்புவதுதான் சாத்தியமா?
 பாஜக தலைவராக தற்போது அமித் ஷா இருக்கிறார். அவருக்கு முன் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் அப்பதவியை வகித்தனர். இவர்கள் அனைவரும் கட்சித் தலைவராவதற்கு முன்பு சாதாரண வாக்குச்சாவடி நிலையிலான தொண்டராகவே இருந்தனர் என்றார் அவர்.
 பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் கூறுகையில், "வாரிசு அரசியலில் ஊறித் திளைக்கும் காங்கிரஸில் செயல்பாடு, திறமை ஆகியவை ஒரு பொருட்டே அல்ல. ராகுல் காந்தியின் கட்சி ரீதியிலான செயல்பாடுகள் பேரழிவை ஏற்படுத்துபவையாக இருந்தாலும் அவர் தலைவராவது ஏற்கெனவே முடிவாகி விட்டது' என்று தெரிவித்தார்.
 பாஜக துணைத் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே கூறுகையில், "கட்சியில் நிர்வாகிகளை நியமிப்பதற்கு ஜனநாயக நடைமுறை அவசியம் என்று ராகுல் காந்தி தெரிவித்து வந்துள்ளார். எனினும், கட்சியின் புதிய தலைவர் பதவியை நிரப்புவதற்கு அடிமட்ட நிலையில் இருந்து என்ன விதமான ஜனநாயக நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது என்பதே கேள்வி' என்றார்.
 மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி கூறுகையில் "குஜராத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் செய்தபோது கிடைத்த முடிவுதான் (தோல்வி), குஜராத்திலும் அக்கட்சிக்குக் கிடைக்கும்' என்று தெரிவித்தார்.
 ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச் செயலாôளர் கே.சி.தியாகி கருத்து தெரிவிக்கையில், "காங்கிரஸ் கட்சிக்கு 132 ஆண்டுகால வரலாறு உள்ளது. தற்போது அக்கட்சியின் பலம் மாநிலக் கட்சியான அதிமுக-வின் பலம் அளவுக்கே உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பலாகும். அதற்கு தற்போது புதிய மாலுமி கிடைக்க உள்ளார் ' என்று குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com