மலையாள நடிகர் திலீப் துபை செல்ல அனுமதி: கேரள உயர் நீதிமன்றம்

பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்துள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு,
மலையாள நடிகர் திலீப் துபை செல்ல அனுமதி: கேரள உயர் நீதிமன்றம்

பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்துள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு, துபை செல்ல கேரள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், தனக்கு ஜாமீன் அளிக்கப்பட்டபோது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தார். இந்நிலையில், துபையில் புதிதாக அமைக்கப்பட்ட ரெஸ்டாரண்டைத் திறப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க 4 நாள் செல்ல வேண்டியிருப்பதாகவும், இதற்காக, தனது பாஸ்போர்ட்டை அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுனில் தாமஸ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சாட்சிகளைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்பதால், திலீப்புக்கு வெளிநாடு செல்ல அனுமதியளிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை. இதையடுத்து, திலீப்பின் பாஸ்போர்ட்டை 6 நாள்களுக்கு விடுவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
பிரபல நடிகை ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்புகையில் அவரை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திலீப்பை கேரள போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. 
அப்போது திலீப் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், ரூ.1 லட்சத்துக்கு பிரமாண உறுதிப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது போன்ற கடுமையான நிபந்தனைகளை கேரள உயர் நீதிமன்றம் விதித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com