51 அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு : மத்திய அரசு நடவடிக்கை

புற்றுநோய், வலி, இதய பாதிப்புகள், தோல் நோய்கள் உள்ளிட்டவற்றுக்கான 51 அத்தியாவசிய மருந்துகள் மீது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) விலைக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

புற்றுநோய், வலி, இதய பாதிப்புகள், தோல் நோய்கள் உள்ளிட்டவற்றுக்கான 51 அத்தியாவசிய மருந்துகள் மீது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) விலைக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி அந்த மருந்துகளின் விலை 6 சதவீதத்தில் இருந்து 53 சதவீதம் வரை குறைகின்றன.
இது தொடர்பாக என்பிபிஏ அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனித்தனி அறிவிக்கைகளில் 13 அத்தியாவசிய மருந்துகள் மீது விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதேசமயம், 15 மருந்துகள் மீதான விலைக் கட்டுப்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 23 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலைகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மருந்துகளில் குடல்பகுதியில் ஏற்படும் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆக்ஸாலிபிளாட்டின் (100 மி.கி. ஊசி), ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கான தடுப்பு மருந்து, தட்டம்மை தடுப்பு மருந்து ஆகியவையும் அடங்கும்.
மறுபுறம், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து, வைட்டமின் கே, காசநோய் தடுப்புக்கான பிசிஜி மருந்து விலைக் கட்டுப்பாட்டு விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2013-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மருந்து விலைகள் கட்டுப்பாட்டு ஆணையின்கீழ் இந்த விலைக் கட்டுப்பாடுகளை என்பிபிஏ அறிவித்துள்ளது. விலைக் கட்டுப்பாட்டின்கீழ் வராத மருந்துகளைப் பொறுத்தவரை, உற்பத்தியாளர்கள் அவற்றின் அதிகபட்ச சில்லறை விலையை ஆண்டுக்கு 10 சதவீதம் வரை அதிகரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
கடந்த 1997-இல் அமைக்கப்பட்ட என்பிபிஏ அமைப்புக்கு மருந்துப் பொருள்களின் விலைகளை நிர்ணயித்தல், கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத மருந்துகளின் விலைகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com