பல கட்ட பாதுகாப்புகளை தாண்டி பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி? பாதுகாப்பு நிபுணர்கள் கவலை

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாம் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் - ஏ - முகமது பயங்கரவாதிகள், பலத்த பாதுகாப்புகளை தாண்டி உள்ளே நுழைந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல கட்ட பாதுகாப்புகளை தாண்டி பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி? பாதுகாப்பு நிபுணர்கள் கவலை


புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாம் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் - ஏ - முகமது பயங்கரவாதிகள், பலத்த பாதுகாப்புகளை தாண்டி உள்ளே நுழைந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாம் மீது ஜெய்ஷ் - ஏ - முகமது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் பலியானார். 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து, அங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளையும் பிஎஸ்எஃப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே பிஎஸ்எஃப் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத பிஎஸ்எஃப் படையினர், சிறிது நேரத்தில் நிலைமையை சுதாரித்துக் கொண்டு, பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பிஎஸ்எஃப் உதவி ஆய்வாளர் பி.கே. யாதவ் (50) உயிரிழந்தார். அதன் பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும், ஏராளமான பிஎஸ்எஃப் படையினர் அங்கு வந்து பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், மீதமுள்ள இரண்டு பயங்கரவாதிகளும் 182-ஆவது பிஎஸ்எஃப் படைப்பிரிவு அமைந்திருக்கும் வளாகத்தில் உள்ள கட்டடத்துக்குள் சென்று பதுங்கி, அங்கிருந்து பிஎஸ்எஃப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அந்தக் கட்டடத்தை பிஎஸ்எஃப் படையினரும், ஜம்மு-காஷ்மீர் போலீஸாரும் சுற்றி வளைத்தனர். கட்டடத்தின் வெளிப்பகுதியில் நின்றுகொண்டு பயங்கரவாதிகளுடன் போலீஸார் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், கட்டடத்துக்குள் அதிரடியாக புகுந்த பிஎஸ்எஃப் படையினர் அங்கு பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.

மிகுந்த பாதுகாப்பு நிறைந்த பிஎஸ்எஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத்துறை நிபுணர் பி.கே. சேஹ்கல் கூறுகையில், ஸ்ரீநகரில் மிகவும் பாதுகாப்பு நிறைந்தது இந்த பகுதி. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் குழு, பல கட்ட பாதுகாப்புகளைத் தாண்டி உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்பது நமது பாதுகாப்பு நிலைகள் குறித்த கவலையை அளிக்கிறது என்றார்.

இது போன்ற தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது, மேலும் இது எதிர்பார்த்த தாக்குதல்தான். பாகிஸ்தான் நிச்சயம் மிக மோசமான தாக்குதலை இந்தியா மீது நடத்தும் என்று எதிர்பார்த்தோம். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார். நல்லவேளையாக மற்ற 3 பேரும் தப்பிவிட்டனர் என்று தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் - டிஜிபி தகவல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் எஸ்.பி. வைத் தெரிவித்தார். இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாகிஸ்தானிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொண்ட குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் நுழைந்திருக்கிறது. இந்தக் குழுவுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு 'நூரா டிராலி' எனப் பெயர் சூட்டியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்துவதற்காக அவர்கள் இங்கு அனுப்பப்பட்டிருந்தனர். இதுகுறித்த தகவலை உளவுத் துறையினர் எங்களுக்கு ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்தச் சூழலில், புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை முகாம் மீது கடந்த மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்த இந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார், அங்கிருந்த மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த மற்ற பயங்கரவாதிகளே தற்போது பிஎஸ்எஃப் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள பயங்கரவாதிகளின் நடமாட்டம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என வைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com