அமெரிக்காவில் குடும்பத்தினர்: தனியாக இருந்த முதியவர் இறந்து ஒரு மாதத்துக்குப் பின் சடலமாக மீட்பு

ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் தனியாக இருந்த 75 வயது முதியவர் உயிரிழந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் குடும்பத்தினர்: தனியாக இருந்த முதியவர் இறந்து ஒரு மாதத்துக்குப் பின் சடலமாக மீட்பு


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் தனியாக இருந்த 75 வயது முதியவர் உயிரிழந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால் அவர் இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்து ஒரு மாத காலம் ஆனதால் அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லஷ்மிநாராயண மூர்த்தியின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் அமெரிக்காவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய நிலையில்தான் இந்த சம்பவம் தெரிய வந்தது. ஹைதராபாத்தின் ராக்டவுன் பகுதியில் உள்ள மாருதி ரெசிடென்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் மாடியில் குடியிருந்த லஷ்மிநாராயணா கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி கீழே விழுந்து பலியாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீட்டின் அனைத்துக் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டிருப்பதால் வெளியே இருந்தவர்களுக்கு துர்நாற்றம் ஏற்படவில்லை.

குளியலறையில் இருந்து வெளியே வரும் போது கீழே இருந்த பல்லியை மிதித்ததில் லஷ்மிநாராயணா வழுக்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு தலையில் அடிபட்டு அதனால் உயிரிழந்துள்ளார். அவரது காலுக்குக் கீழே பல்லி ஒன்றும் செத்துக் கிடப்பது இதை உறுதி செய்துள்ளது. 

அமெரிக்காவில் இருந்த இவரது குடும்பத்தினர், கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துள்ளனர். ஒரு மாத காலம் ஆனதால், இந்தியா வந்து என்ன ஆனது என்று பார்க்க மனைவி மற்றும் மகள்கள் ஊருக்கு வந்த போதுதான் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தங்களுடன் அமெரிக்கா வந்து தங்குமாறு மகள்கள் தொடர்ந்து விடுத்த அழைப்பை ஏற்காமல், இறுதியாக கடந்த ஜூலை மாதம்தான் தனது மனைவியை அமெரிக்கா அனுப்பி வைத்துவிட்டு தான் மட்டும் அந்த குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com