அமித் ஷா, ஜேட்லியுடன் மோடி ஆலோசனை

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருடன் வியாழக்கிழமை ஆ
அமித் ஷா, ஜேட்லியுடன் மோடி ஆலோசனை

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து அரசு அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. எனினும், சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் மோடி வரும் 7, 8-ஆம் தேதிகளில் மேற்கொள்ள உள்ள பயணத்துக்கு முன்பாக மேற்கண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றன. எனினும், பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆதரித்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் ஒரு காலாண்டில் மட்டுமே ஏற்பட்ட சரிவை முன்வைத்து சிலர் அவநம்பிக்கையைப் பரப்பி வருவதாக அவர் விமர்சித்தார்.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார். நாடு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கு, ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, திவால் சட்டம் உள்பட கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் உதவும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே, கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அம்மாநிலத்துக்கு சென்றிருந்த பாஜக தலைவர் அமித் ஷா, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு தில்லி திரும்பினார். பிரதமருடனான ஆலோசனையில் பங்கேற்கவே அவர் தில்லி திரும்பியதாகக் கூறப்படுகிறது.
எனினும், கேரளத்தில் தாம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கு போதிய மக்கள் கூட்டம் வராத காரணத்தால்தான் அமித் ஷா அதில் பங்கேற்காமல் தில்லி சென்று விட்டதாக அம்மாநில ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com