தில்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
தில்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

தில்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுப்பதற்காக தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று 2016, நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் 11-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தாற்காலிகமாக விலக்கிக் கொண்டது.

மேலும், தில்லியில் தசரா, தீபாவளி பண்டிகைகளுக்கு பிறகு நிலவும் சுற்றுச்சூழல் மாசுவை கணக்கிட்டு பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவைக் கணக்கிட குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே தில்லியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டும் தீபாவளி, தசரா பண்டிகளையின்போது விற்பனை செய்ய வேண்டும். புதிதாக பிற மாநிலங்களில் இருந்து பட்டாசுகளைக் கொண்டு வரக் கூடாது என்று உத்தரவிட்டிருந்து.

இதனிடையே, தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதித்து கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவையே அமல்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், "கடந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது.

தில்லியின் காற்று மாசுக்கு பட்டாசுகளும் ஒரு காரணம் என்று நீதிமன்றம் கூறி, பட்டாசு விற்பனைக்கு முழுமையான தடை விதித்தது.

அப்படி இருக்கும்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த மாதம் தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரித்து, தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தாற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது ஏற்புடையதல்ல. ஆகையால், பட்டாசு விற்பனைக்கு கடந்த ஆண்டு பிறப்பித்த முழுமையான தடை உத்தரவையே அமல்படுத்த வேண்டும்' என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "உச்ச நிதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில் எந்த மாதிரியான மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்? தில்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அதன் பின்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நடைபெற்ற பல்வேறு விவகாரங்களின் அடிப்படையில் தடை உத்தரவு தாற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

எனினும், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கும் விவகாரம் குறித்து வெள்ளிக்கிழமை (அக். 6) விசாரணை நடத்தப்படும்' என்று நீதிபதிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com