நடப்பாண்டில் 600 முறை அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடப்பு ஆண்டில் மட்டும் 600 முறை அத்துமீறி தாக்கியது அம்பலமாகியுள்ளது.
நடப்பாண்டில் 600 முறை அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்


இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக வைத்துள்ளது. 

இரு நாடுகளுக்கு இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் அதே வேளையில் இதுபோன்று அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவத்தில் ஈடுபடுவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையோர கட்டுப்பாடு மற்றும் அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும், இந்திய எல்லையோரங்களில் அமைந்துள்ள கிராமங்களில் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ தடவாளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இருப்பினும், இந்திய ராணுவம் மற்றும் எல்லையோர காவல்படையினரால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும் (செப்டம்பர் மாதம் வரை) 600 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகமாகும்.

இதுபோன்ற அத்துமீறிய தாக்குதல் சம்பவத்தால் 3 சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2016-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி அப்போது 450 முறை இதுபோன்ற அத்துமீறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதன்முறையாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சர்வதேச எல்லையோர கட்டுப்பாடு மற்றும் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதி உள்ளிடவை தொடர்பாக 2003-ம் வருடம் நவம்பர் மாதம் ஒப்பந்தம் ஏற்படுத்தியது. ஆனால், இன்றுவரை பாகிஸ்தான் அதனை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே 3,323 கிலோ மீட்டர் தூரம் எல்லைப் பகுதி அமைந்துள்ளது. அதில், 221 கிலோ மீட்டர் சர்வதேச எல்லைப்பகுதியிலும், 740 கிலோ மீட்டர் ஜம்மு-காஷ்மீர் பகுதியிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com