ஜிஎஸ்டி வரிச் சலுகைக்கும் குஜராத் தேர்தலுக்கும் என்ன தொடர்பு?

தில்லியில் நடைபெற்ற சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில் 27 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதற்கும், குஜராத் தேர்தலுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிதித்துறை இணையமைச்சர் சிவபிரதாப் சுக்லா
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிதித்துறை இணையமைச்சர் சிவபிரதாப் சுக்லா


புது தில்லி: தில்லியில் நடைபெற்ற சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில் 27 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதற்கும், குஜராத் தேர்தலுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தில்லியில் நடைபெற்ற சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில், சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன;  மேலும், பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகள், தின்பண்டங்கள் உள்பட 27 பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

உணவகத்தில் குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு பில்லைப் பார்த்தால் நம்முடன் மாநில அரசும், மத்திய அரசும் சேர்ந்து சாப்பிட்டது போல பில் வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வருவது நூற்றுக்கு நூறு உண்மையான மைன்ட் வாய்ஸ்தான்.

ஜிஎஸ்டிக்கு எதிராக கடும் விமரிசனங்களை எதிர்கொண்டுள்ள மத்திய அரசு, நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தைக் கூட்டி சிறு, குறு வணிகர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு வரிச் சலுகை அறிவித்துள்ளது.

அதாவது, ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ரோட்டி, காக்ரா உட்பட 27 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பதாக நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். பல பொருட்களின் வரி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதில் குஜராத் மாநில மக்களின் மிக முக்கிய உணவு பொருளான காக்ரா மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு கடும் விமரிசனத்தை எதிர்கொண்டுள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் ஜரிகை வேலைப்பாடுகளுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் முக்கியத் தொழில்களில் ஜரிகை வேலைப்பாடும் ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த விமரிசனம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், பல பொருட்களின் விலையேற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போதைக்கு பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படாது என்று அருண் ஜேட்லி திட்டவட்டமாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை உறுதிசெய்யும் வகையில், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக, ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடி, ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 22-ஆவது கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆந்திர நிதித் துறை அமைச்சர் ஒய்.ராமகிருஷ்ண நாயுடு, கேரள நிதித் துறை அமைச்சர் தாமஸ் இசாக், ஜம்மு-காஷ்மீர் நிதித் துறை அமைச்சர் ஹசீப் திராபு, தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சிறு வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி கூறியதாவது:

ரூ.1.5 கோடி வரை விற்றுமுதல் உள்ள சிறு, நடுத்தர தொழிலகங்கள், ஒவ்வொரு மாதமும் கணக்குத் தாக்கல் செய்வதற்கு பதிலாக 3 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 90 சதவீத வர்த்தகர்கள் பயனடைவர். இதேபோல, சிறு, நடுத்தர தொழிலகங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இ-வாலட்: ஏற்றுமதியாளர்கள் கணக்கு தாக்கல் செய்ய வசதியாக, ஒவ்வொருவருக்கும் பிரத்யேக 'இ-வாலட்' உருவாக்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் இந்த இ-வாலட் உருவாக்கப்படும். மேலும், ஏற்றுமதியாளர்களுக்கு ஐஜிஎஸ்டி வரியில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏ.சி. உணவகங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடர்பாக அமைச்சர்கள் குழு பரிசீலிக்கவுள்ளது. இக்குழு, அடுத்த 14 நாள்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். 'ஜிஎஸ்டிஎன்' இணையதளத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும். பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகள், தின்பண்டங்கள் உள்ளிட்ட 27 பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில பொருள்களுக்கான வரி, 5 சதவீதத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் உதிரி பாகங்களுக்கான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதேபோல, நவரத்தினக் கற்கள், நகைகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்யவும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்குவோர், இனி ஆதார், நிரந்தரக் கணக்கு எண் (பான்) விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை. இதுதொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com