மும்பை எண்ணெய் கிணறு தீ விபத்து: தீயை அணைக்க 36 மணிநேரத்துக்கும் மேல் போராட்டம்

பாரத பெட்ரோலியம் எண்ணெய் கிணறு தீ விபத்தை கட்டுப்படுத்த 36 மணிநேரங்களுக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மும்பை எண்ணெய் கிணறு தீ விபத்து: தீயை அணைக்க 36 மணிநேரத்துக்கும் மேல் போராட்டம்

மும்பை புறநகர் பகுதியில் அரேபியக் கடலின் அருகே அமைந்துள்ள புட்சர் தீவில் பாரத பெட்ரோலியத்துறைக்குச் சொந்தமான எரிபொருள் சேமிப்புக் கிடங்கு உள்ளது.

அரேபியக் கடலில் உள்ள இந்த சிறிய தீவு மும்பை கப்பல் தளவாடத்துக்குச் சொந்தமானது. 

இங்கு கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்கு உள்ளது. மும்பைக்கு வரும் எரிபொருள் முதலில் இங்கு வைக்கப்படும். பின்னர் இங்கிருந்து வாடாலா என்ற இடத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அணுப்பி வைக்கப்படும்.

இப்பகுதியில் இருந்து திடீரென கறும்புகை வெளியானது. அது அங்கிருந்து சுமார் 2 கிலோ மீ்ட்டர் தொலைவுக்கு காணப்பட்டது. அப்போது இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, 50 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த கடுமையாகப் போராடினர். 

இதுகுறித்து மும்பை கப்பல் தளவாடத்தின் அதிகாரி மனோகர் ராவ் கூறியதாவது:

புட்சர் தீவில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் சனிக்கிழமை காலை 5 மணியளவில் மின்னல் தாக்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீ விபத்து ஏற்பட்டது. 

அதில் சுமார் 40,000 டன் கச்சா எண்ணெய் முற்றிலும் எரிந்து நாசமானது. மொத்த எரிபொருள் சேமிப்பில் இருந்து 25 சதவீதத்தை இழந்துவிட்டோம். 

தீ விபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

இந்நிலையில், 36 மணிநேரங்கள் தொடர் போராட்டத்துக்குப் பின்னரும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

தற்போது வரை 7,000 கிலோ லிட்டர் டீசல் மீதமுள்ளதாக தெர்மல் இமேஜிங் என்ற நவீன ரக கேமிராவைக் கொண்டு கண்டறியப்பட்டது.

இதனால் அடுத்த 12 மணி நேரங்களுக்கு தீயை அணைக்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக 60 முதல் 80 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் மட்டும் இருக்கும் இடத்தில் இந்த தீ விபத்தால் 900 டிகிரியாக அதிகரித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com