காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: விமானப் படை வீரர்கள் 2 பேர் பலி: பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பந்திபோரா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய விமானப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பந்திபோரா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய விமானப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:
பந்திபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் புதன்கிழமை அதிகாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஓர் இடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, வீரர்கள் பதிலடி கொடுத்தனர். 
நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. மற்ற பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 2 பேரும் உயிரிழந்தனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காவல் துறை பொது இயக்குநர் எஸ்.பி.வைத் கூறியதாவது:
துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். அப்பாவி மக்களைக் கொலை செய்தது, பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியது என அவர்கள் பல்வேறு குற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றனர். அவர்களை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார் வைத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com