கிராமப்புறங்களில் பணி செய்யாத 4,548 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து: மஹாராஷ்டிர அரசு அதிரடி

கிராமப்புறங்களில் ஒரு வருடம் கட்டாய பணி செய்ய மறுத்த 4,548 மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து மஹாராஷ்டிர அரசு வெள்ளிக்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கிராமப்புறங்களில் பணி செய்யாத 4,548 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து: மஹாராஷ்டிர அரசு அதிரடி

மருத்துவப் படிப்பு முடித்து கிராமப்புறங்களில் ஒரு வருடம் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்ற உத்தரவை மீறி செயல்பட்ட 4,548 மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து மஹாராஷ்டிர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மஹாராஷ்டிர அரசின் சட்டப்படி மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் (DMER) பதிவு செய்ய வேண்டும். 

பின்னர் அரசாங்கத்தின் நடைமுறைப்படி ஒரு வருடத்துக்கு கிராமப்புறங்களுக்குச் சென்று கட்டாய மருத்துவப் பணி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தவறுபவர்கள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும். 

இந்நிலையில், இந்த சட்ட விதிமீறலில் ஈடுபட்ட 4,548 மருத்துவர்களின் (DMER) அங்கீகாரத்தை ரத்து செய்து மஹாராஷ்டிர அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

இவர்கள் அனைவரும் 2005-ம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை அரசு மருத்துவக்கல்லூரியின் கீழ் மருத்துவம் படித்து பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக அதிகாரி கூறுகையில்,

மஹாராஷ்டிர அரசு விதிமுறைகளின் படி மருத்துவப் படிப்பு முடித்து இயக்குநரக்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு மருத்தும் முடித்து பதிவு செய்த அனைத்து மருத்துவர்களும் கிராமப்புறங்களில் கட்டாயம் ஒருவருடம் பணியாற்ற வேண்டும். அதனை மீறுபவர்களுக்கு  தண்டனையாக அபராதம் விதிக்கப்படும்.

அதில், இளநிலை மருத்துவருக்கு ரூ.10 லட்சம், முதுநிலை மருத்துவருக்கு ரூ.50 லட்சம் மற்றும் நிபுணர் குழு மருத்துவருக்கு ரூ.2 கோடி வரையில் அபராதம் வேறுபடும். இதனையும் செலுத்தத் தவறும் மருத்துவர்களின் பதிவு ரத்து செய்யப்படும்.

அனைவருடனும் பழகும் திறன் மற்றும் அனைத்து வகை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளவே கிராமப்புறங்களில் ஒரு வருடம் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்பதன் அடிப்படை நோக்கமாகும்.

இதற்காக அரசு தரப்பில் இருந்து மருத்துவர்களுக்கு தேவையான அளவு கணிசமான ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் தவறிய காரணத்துக்காகவே அந்த 4,548 மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com