ரோஹிங்கயா இன மக்களை 21-ஆம் தேதி வரை மியான்மருக்கு திருப்பி அனுப்பக் கூடாது!

ரோஹிங்கயா இன மக்களை 21-ஆம் தேதி வரை மியான்மருக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது   
ரோஹிங்கயா இன மக்களை 21-ஆம் தேதி வரை மியான்மருக்கு திருப்பி அனுப்பக் கூடாது!

புதுதில்லி: ரோஹிங்கயா இன மக்களை 21-ஆம் தேதி வரை மியான்மருக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது   

மியான்மரில் ரோஹிங்கயா இனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, மியான்மரில் உள்ள தங்கள் வசிப்பிடங்களில் இருந்து ரோஹிங்கயா இனமக்கள் வெளியேறி, அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மியான்மரின் நெருங்கிய அண்டை நாடான இந்தியாவின் மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ரோஹிங்கயா இனமக்கள் ஏராளமானோர் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ரோஹிங்கயா இன மக்களுக்கும், ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பிருப்பதாகவும், இதனால் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதென்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா இன மக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதென்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து, அகதிகளாக தஞ்சமடைந்திருக்கும் அந்த இனத்தைச் சேர்ந்த இருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ரோஹிங்கயா இன மக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது என்னும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள மனு மீது வரும் 13-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும். அப்போது சட்ட விதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆதலால், இந்த விவகாரம் மனிதாபிமானம் மற்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்டது என்று உணர்வுப்பூர்வமான வாதங்களை முன்வைப்பதை பிரதிவாதிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

வழக்கு விசாரணையில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில், தேவைப்படும் ஆவணங்கள், சர்வதேச தீர்மானங்களை தாக்கல் செய்யும்படி, மனுதாரரான ரோஹிங்கயா அகதிகள், மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

முன்னதாக, வழக்கு விசாரணையில் ரோஹிங்கயா அகதிகள் இருவர் சார்பில் ஆஜராகி, மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் பாலி எஸ் நாரிமன் வாதாடுகையில், 'அரசியலமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவில், தனிநபர்களுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன; அதனால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான்' என்றார்.

மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடுகையில், 'இந்த விவகாரத்தை சிறிது சிறிதாக விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை; விரிவான விசாரணைக்காக ஒரு நாள் முழுமையும் ஒதுக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

பின்னர் இந்த வழக்கை 13-ஆம் தேதியன்றுவிசாரிப்பது என்று நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதன்படி இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

இந்த விவகாரத்தினை பொறுத்தவரை தேசம் முக்கியம் என்பதற்கு இரண்டாம் இடம் இல்லை. ஆனால் அதே சமயம் ரோஹிங்கயா இன மக்களின் மனித உரிமைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இதில் நாம் சமநிலையை கையாள வேண்டும்.இது சாதாரண ஒரு வழக்கல்ல. இந்த விவகாரத்தில் பலரின் மனித உரிமைஅடங்கியுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கூடுதல் அவகாசம் அளிக்கும் பொருட்டு இந்த வழக்கானது நவம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை ரோஹிங்கயா இன மக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com