ஜெய் ஷா நிறுவன முறைகேடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் நிறுவன முறைகேடு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஜெய் ஷா நிறுவன முறைகேடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் நிறுவன முறைகேடு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, கோவா மாநிலம் பனாஜியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நிர்வகிக்கும் நிறுவனம், பல முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்து அமித் ஷாவும், பிரதமர் மோடியும் இதுவரை எந்தக் கருத்தையும் கூறவில்லை.
ஜெய் ஷாவின் நிறுவனம் ஒரு வங்கியிலிருந்து வர்த்தகக் கடனாக ரூ.15 கோடியைப் பெற்றுள்ளது. இது எவ்வாறு சாத்தியமாகும்? நமது நாட்டில் இத்தனைப் பெரிய தொகையை வங்கிகளிலிருந்த வர்த்தகக் கடனாக பெற முடியுமா? இந்த அளவுக்கு பெரிய கடன் தொகையை வங்கிகளிலிருந்து எப்படி பெறுவது என்ற சூட்சுமத்தை பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் கூற வேண்டும்.
முதலில், இந்த முறைகேடு தொடர்பான செய்திகள் வெளியானதும், ஜெய் ஷாவுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லாதது போன்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பிரச்னை பெரிதாகத் தொடங்கிய பிறகு, இந்தத் தந்திரத்தை அவர்களால் தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை.
தற்போது, ஜெய் ஷாவுக்கு மத்திய அமைச்சர்கள் பலர் நற்சான்றிதழ் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
ஒரு சாதாரண தொழிலதிபருக்கு ஆதரவாக, மத்திய அமைச்சர்கள் முன்வர வேண்டிய அவசியம் என்ன? ஜெய் ஷா தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தாவை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் அரசு உத்தரவிட வேண்டும்.
மத்திய அரசின் கைப்பாவையாக இல்லாமல், இந்த விசாரணையை சிபிஐ சுதந்திரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரியங்கா சதுர்வேதி.
முன்னதாக, அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்குச் சொந்தமான "டெம்பிள் எண்டர்பிரைஸஸ்' என்ற நிறுவனத்தின் விற்றுமுதல் (டர்ன் ஓவர்), கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ஆயிரம் மடங்கு அதிகரித்திருப்பதாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் "தி வயர்' என்ற வலைதளச் செய்தி நிறுவனத்தில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com