சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை: அரசு அதிகாரிகளுக்கு உ.பி. முதல்வர் உத்தரவு

சமூக விரோதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் யோகி
சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை: அரசு அதிகாரிகளுக்கு உ.பி. முதல்வர் உத்தரவு

சமூக விரோதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள், காவல் துறையினருடன் காணொலி முறையில் கலந்துரையாடிய அவர், இதுதொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் வாயிலாக பல்வேறு நகராட்சி அமைப்புகளுக்கு புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக அந்த மாநில அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ளது.
இதனிடையே, தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் நடைபெறும் லட்சுமி பூஜைக்காக ஆங்காங்கே சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கான பணிகளும் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன. 
பண்டிகை மற்றும் தேர்தல் காலமாக இருப்பதால், அதைப் பயன்படுத்தி மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சமூக விரோதிகள் திட்டமிடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், போலீஸாருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துரையாடினார். காணொலி முறை மூலம் அந்தக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய உத்தரவுகளைஅவர் பிறப்பித்ததாகத் தெரிகிறது. 
இதுதொடர்பாக உத்தப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள் ஆகியவற்றில் கண்காணிப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். பண்டிகைக் கால பூஜைகளுக்காக லட்சுமி சிலைகளையும், விநாயகர் சிலைகளையும் நிறுவி வழிபாடு செய்வது வழக்கம். அவற்றுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய முதல்வர், அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிட்டார்.
நகர அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்றும் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தார். 
வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்து உத்தரப் பிரதேசத்தில் வசிப்பவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com