வளர்ச்சி மூலம் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுவோம்: பிரதமர் மோடி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலானது வளர்ச்சிக் கொள்கைக்கும், குடும்ப அரசியலுக்கும் இடையே நடைபெறும் போர் ஆகும்; இந்தப் போரில், வளர்ச்சிக் கொள்கையின் மூலம் குடும்ப அரசியலுக்கு
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மக்களை பார்த்துக் கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மக்களை பார்த்துக் கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலானது வளர்ச்சிக் கொள்கைக்கும், குடும்ப அரசியலுக்கும் இடையே நடைபெறும் போர் ஆகும்; இந்தப் போரில், வளர்ச்சிக் கொள்கையின் மூலம் குடும்ப அரசியலுக்கு பாஜக முடிவு கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் பல்வேறு பிரசாரப் பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் 'குஜராத் கௌரவப் பேரணி' என்ற பெயரிலான பேரணியை பாஜக நடத்தியது. கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த இப்பேரணியின் நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, காங்கிரஸாருக்கு அச்சமும், குழப்பமும் மேலோங்கி வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற மற்ற மாநிலத் தேர்தல்களைப் போல, இந்தத் தேர்தலிலும் நாம் தோற்றுவிடுவோம் என்ற கவலை காங்கிரஸாரைப் பீடித்துள்ளது. இந்த விரக்தியின் காரணமாகவே, அவர்கள் பாஜக மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, மக்களை தவறாக வழிநடத்த முயலுகின்றனர்.
ஆனால், காங்கிரஸின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி அடையப் போவதவில்லை. இதற்கு, கடந்த கால தேர்தல்களே சிறந்த சான்றாகும். இது, அவர்களுக்கு தெரிந்ததால்தான் தற்போது எதிர்மறை அரசியலை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். மக்களிடத்தில் பாஜக வெறுப்புணர்வைத் தூண்டுவதாகவும், மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்துவதாகவும் அவர்கள் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸாரிடம் ஒன்று கேட்கிறேன்; எந்தத் தேர்தலிலாவது நீங்கள் வளர்ச்சிக் கொள்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்திருக்கிறீர்களா? அவ்வாறு, வளர்ச்சியை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் துணிச்சலாவது உங்களுக்கு இருக்கிறதா? காங்கிரஸாருக்கு அந்தத் துணிச்சல் என்றைக்கும் இருந்தது கிடையாது. வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டிருந்தால்தானே, தேர்தல் சமயங்களில் அவர்களால் அதனை கையில் எடுக்க முடியும். ஊழல் மட்டுமே புரிந்தவர்கள், வளர்ச்சியைப் பற்றி என்ன பேசுவார்கள்? பாஜக குறித்து மக்களிடத்தில் பொய்ப் பிரசாரம் மேற்கொள்வதும், எதிர்மறை எண்ணங்களைத் தூண்டுவதும்தான் காங்கிரஸுக்கு தெரிந்த ஒரே தேர்தல் உத்தி.
பொதுவாகவே, குஜராத்தையும், குஜராத் மக்களையும் காங்கிரஸுக்கும், நேரு குடும்பத்தினருக்கும் என்றுமே பிடிக்காது. நானும் குஜராத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. வல்லபபாய் படேல், மொரார்ஜி தேசாய் என எத்தனை உன்னதமான தலைவர்களை இந்நாட்டுக்கு குஜராத் வழங்கியிருக்கிறது. ஆனால், அந்தத் தலைவர்களை எல்லாம் காங்கிரஸும், நேரு குடும்பமும் அவமதித்த வரலாற்றினை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
குஜராத் முதல்வராக இருந்தபோது என்னை ஒழித்துக்கட்ட பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் அரசு (அப்போதைய மத்திய அரசு) மேற்கொண்டது. அதனை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறிய வாய்ப்பை கூட அவர்கள் தவறவிட்டது கிடையாது. குஜராத் கலவர வழக்கில், என்னை சிறையில் அடைத்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸார் காய்களை நகர்த்தினர். அமித் ஷா என்னுடன் இருக்கும் வரை, அது சாத்தியமில்லை என்று தெரிந்துகொண்ட பின்னர், அவரையும் சிறையில் அடைத்தனர். எங்கள் (பாஜகவினர்) மீதான வன்மம் இன்னமும் அவர்களின் மனதில் இருக்கிறது.
இந்த தீய எண்ணம்தான் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணம். ஒருகாலத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஆண்ட அந்தக் கட்சி, இன்றைக்கு சொற்ப எண்ணிக்கையிலான மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. எதிர்மறை அரசியலை முன்னெடுத்ததன் விளைவைத்தான் காங்கிரஸ் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறது. பரிதாபம் என்னவென்றால், அக்கட்சி அதனை இன்னமும் உணரவில்லை.
பாஜகவை தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்றும், பழங்குடியிருக்கு எதிரான கட்சி என்றும் காங்கிரஸார் விமர்சிக்கின்றனர். ஆனால், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தலித் எம்.பி.க்களயும், பழங்குடியின எம்.பி.க்களையும் கொண்டிருக்கும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான். இது மக்களுக்கும் தெரியும். உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏன் இந்த கீழ்த்தரமான பிரசாரங்களை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது என்பது புரியவில்லை.
எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை, வளர்ச்சியை முன்னிறுத்தியே பாஜக சந்திக்கவுள்ளது. எனவே, இந்தத் தேர்தல் வளர்ச்சிக் கொள்கைக்கும், குடும்ப அரசியலுக்கும் (காங்கிரஸ்) இடையே நடைபெறும் போர் ஆகும். இந்தப் போரில், வளர்ச்சி மூலமாக குடும்ப அரசியலுக்கு பாஜக முடிவு கட்டுவது உறுதி. ஊழலில் திளைத்த காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மூலமாக மக்கள் தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்றார் நரேந்திர மோடி.

ஜிஎஸ்டி: நான் தனியாக எடுத்த முடிவல்ல
 சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தும் முடிவை நான் மட்டும் தனியாக எடுக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
தனது சொந்த மாநிலமான குஜராத்தின் காந்திநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும் என்ற முடிவை, பிரதமர் என்ற முறையில் நான் மட்டும் தனியாக எடுக்கவில்லை. 30-க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்புடன் ஆலோசனை நடத்திதான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி குறித்து தேவையற்ற பொய் பிரசாரத்தை காங்கிரஸ் மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில், இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் காங்கிரஸ் கட்சிக்கும் சமபங்கு உண்டு.
ஜிஎஸ்டி-யின் முக்கிய அம்சங்களை வடிவமைத்தலில் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. ஜிஎஸ்டி குறித்து எழும் கருத்துகளை கவனமாக ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் மோடி.
முன்னதாக, பிரதமர் மோடி தன்னிச்சையாக மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி அமல் ஆகிய நடவடிக்கைகளால்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதே நேரத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கருப்புப் பணம் பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் தொடக்கத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்பட்டாலும், நீண்ட காலத்தில் சிறப்பான பலன் கிடைக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com