விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் பாஜகவுக்கு இல்லை: சிவசேனை தாக்கு

விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் பாஜகவுக்கு இல்லை என்று சிவசேனைக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் பாஜகவுக்கு இல்லை என்று சிவசேனைக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் திங்கள்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு நாட்டில் ஜனநாயகம் வலிமையுடன் திகழ வேண்டுமென்றால், அங்கு கருத்து சுதந்திரமும், மாற்றுக் கருத்துகளை வரவேற்கும் அரசாங்கமும் இருக்க வேண்டும். ஆனால், தற்போது மத்தியில் இருக்கும் பாஜக அரசானது, இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. தம் மீது விமர்சனங்கள் எழுப்பப்படுவதை அரசு விரும்புவதில்லை.
பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர்கள் ஆகியோர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக மத்திய அரசு கருதி வருகிறது. 'எந்தச் சூழலிலும் அரசை மக்கள் விமர்சிக்கக் கூடாது; என்ன நடந்தாலும் மக்கள் பொறுமை காக்க வேண்டும்' என்பதே பாஜக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.
தற்போது இந்தக் கொள்கையுடன் இருக்கும் மத்திய அரசு, எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன செய்தது? அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை அவர்கள் (பாஜக) விமர்சிக்கவில்லையா? மன்மோகன் சிங் எது செய்தாலும் அவரை கேலிக்குரியவராக சித்திரிக்க பாஜக தயங்கியதில்லையே? இன்றைக்கு பாஜக கூறும் கண்ணியமும், கட்டுப்பாடும் அன்றைக்கு என்ன ஆனது? பிறருக்காக வெட்டிய குழியில் தாமே வந்து விழுவது போன்ற சூழலே தற்போது பாஜகவுக்கு உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்வதற்காக பாஜக பயன்படுத்தி வந்த வலைதளங்கள், இன்று மத்திய அரசின் முகத்திரையைக் கிழிக்க பயன்பட்டு வருகின்றன. ஆனால், இந்த விமர்சனங்களை ஏற்கும் மனநிலை பாஜக அரசுக்கு இல்லை. தங்களை விமர்சிப்பவர்கள் மீது வெறுப்பையும், எரிச்சலையுமே பாஜக உமிழ்கிறது. இதற்குப் பதிலாக, அந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள பாஜக முன்வர வேண்டும் 
இல்லையெனில், பாஜக அல்லது மத்திய அரசு குறித்து யாரும் சுதந்திரமாகக் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com