பிறவியிலேயே மம்தா ஒரு புரட்சியாளர்: பிரணாப் முகர்ஜி

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, பிறவியிலேயே ஒரு புரட்சியாளர் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வர்ணித்துள்ளார்.
பிறவியிலேயே மம்தா ஒரு புரட்சியாளர்: பிரணாப் முகர்ஜி

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, பிறவியிலேயே ஒரு புரட்சியாளர் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வர்ணித்துள்ளார்.
"கூட்டணி ஆட்சியின் ஆண்டுகள்' என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மம்தா குறித்து அந்தப் புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 1992-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் உள்கட்சித் தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று அப்போது கட்சியில் இருந்த மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.
மம்தா உள்பட சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வெளிப்படையான உள்கட்சித் தேர்தலை விரும்புவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இல்லையெனில் உள்கட்சிப் பூசல் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான பி.வி.நரசிம்ம ராவ், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு என்னிடம் அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மம்தாவுக்கு அழைப்பு விடுத்தோம். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா, திடீரென எனக்கெதிராகவும், இன்னும் சிலருக்கு எதிராகவும் குற்றம்சாட்டத் தொடங்கினார். கட்சிப் பொறுப்புகளை எங்கள் சிலருக்குள்ளேயே பகிர்ந்து கொள்வதாக அவர் சாடினார். அவரது குற்றச்சாட்டு எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டது. நாங்கள் தெரிவித்த எதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, வெளிப்படையான உள்கட்சித் தேர்தல் வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
அப்போது, திடீரென கோபமடைந்து அவர் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார். அந்தச் சம்பவத்தில் நான் அவமதிக்கப்பட்டது போல் தோன்றியது.
அதைத் தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மம்தா தோல்வியைத் தழுவினார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது, "நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்னை தோற்கடிக்க வேண்டும் என்ற உங்களுடைய விருப்பம் நிறைவேறிவிட்டதா?' என்று என்னிடம் மம்தா கேட்டார்.
அதற்கு, "நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள். உங்களுடனான அந்தச் சந்திப்புக்கு பிறகு உள்கட்சித் தேர்தலில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை' என்று பதிலளித்தேன்.
மேற்கு வங்க சமகால அரசியலில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. தன்னுடைய அரசியல் பயணத்தை அவரே வடிவமைத்தார். தீவிர உழைப்பின் மூலம் தற்போதைய நிலையை அவர் எட்டியிருக்கிறார். பிறவியிலேயே அவர் ஒரு புரட்சியாளர்.
கடந்த 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்க மாநிலம், ஜாதவ்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்நாத் சாட்டர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு மம்தா வென்றார். 
அந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது என்று அந்தப் புத்தகத்தில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com