ஏழ்மையும், பாகுபாடும் இல்லாததே ராமராஜ்யம்!

"ராமராஜ்யம் என்பதற்கு ஏழ்மையற்ற, பாரபட்சமற்ற ஆட்சி என்று அர்த்தம். கோயில் நகரமான அயோத்தியை மேம்படுத்த எனது அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அரசியல் நோக்கில் பார்க்கக் கூடாது' என்று உத்தரப்பிரதேச
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள அனுமார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத். நாள்: வியாழக்கிழமை.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள அனுமார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத். நாள்: வியாழக்கிழமை.

"ராமராஜ்யம் என்பதற்கு ஏழ்மையற்ற, பாரபட்சமற்ற ஆட்சி என்று அர்த்தம். கோயில் நகரமான அயோத்தியை மேம்படுத்த எனது அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அரசியல் நோக்கில் பார்க்கக் கூடாது' என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
வடமாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை வியாழக்கிழமை (அக். 19) கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு, அயோத்தியில் சரயு நதிக்கரையில் புதன்கிழமை உத்தரப் பிரதேச அரசு சார்பில் பிரமாண்டமான முறையில் "தீப உற்சவம்' என்ற பெயரில் தீபாவளி விழா நடத்தப்பட்டது. அந்த நதிக்கரையில் நடைபெற்ற விழாவில் 1.71 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் "ஜெய்ஸ்ரீராம்', "பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷங்களுக்கு இடையே முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது:
சிலர் எனது அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சிக்கின்றனர். நான் என்ன செய்தாலும் அதைப் பற்றி ஆராயாமல் விமர்சிக்கின்றனர். நான் அயோத்திக்கு வந்தால் அவர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். ஒருவேளை நான் இங்கு வராவிட்டால் அயோத்திக்கு வர நான் பயப்படுவதாக அவர்கள் கூறுவர்.
தற்போது, அயோத்தி நகரை மேம்படுத்தும் திட்டம் என்பது மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக மேற்கொள்ளப்படுவதாகக் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, கோதுமைக் கொள்முதல் உள்பட கடந்த 6 மாதங்களில் மாநில அரசு செய்துள்ள பணிகளோடு நான் இங்கு வந்துள்ளேன்.
ஜாதி, இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை. இதற்கு முந்தைய ராவண ராஜ்யத்தில் (மாநிலத்தின் முந்தைய அரசுகள்) குடும்பம், ஜாதி, மற்றும் சில விஷயங்களின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்பட்டது. எதிர்க்கட்சியினர் எழுப்பும் அவமானகரமான, மலிவான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிப்பது கூட கண்ணியத்துக்குக் குறைவானது என்று கருதுகிறேன்.
அயோத்தி நகரம், மனித குலத்துக்கு ஏராளமான விஷயங்களை அளித்துள்ளது. ராம ராஜ்யம் என்ற சிந்தனையை அளித்தது அயோத்திதான். ராமராஜ்யத்தில் ஏழ்மை, வலி, குறைகள் அல்லது பாரபட்சம் ஆகியவை இருக்காது. இந்தச் சிந்தனையின் உண்மையான அர்த்தமானது, ஒவ்வொருவருக்கும் வீடு, அனைத்துக் குடும்பங்களுக்கும் மின்சாரம், எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுவது என்பதாகும். அயோத்தி தொடர்பாக சிலர் எதிர்மறையான விவாதங்களை நடத்துவது ஏன்?
தற்போது இந்த விழாவின் மூலம் எதிர்மறையில் இருந்து நேர்மறையான சிந்தனையைக் கொண்டுவர நாம் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்தப் பெருமுயற்சியில் அயோத்திவாசிகள் அனைவரும் ஒத்துழைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. அயோத்தி தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால் அந்த நிலைமை இனி நீடிக்காது. நாம் இங்கு ரூ.133 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அயோத்தியின் பாரம்பரியப் புகழை மீண்டும் நிலைநாட்ட நான் விரும்புகிறேன். சரயு நதிக்கரையில் 1.71 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. இது அயோத்தி நகராட்சியில் உள்ள மக்கள்தொகையின் எண்ணிக்கையாகும் என்றார் ஆதித்யநாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com