அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்த முடிதிருத்தும் தொழிலாளிக்கு நூதன தண்டனை: பிகாரில் பரபரப்பு

பிகாரில் அனுமதியின்றி ஒருவரது வீட்டுக்குள் நுழைந்ததாகக் கூறி முடிதிருத்தும் தொழிலாளியை ஊர் பஞ்சாயத்தில் காலணியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் அனுமதியின்றி ஒருவரது வீட்டுக்குள் நுழைந்ததாகக் கூறி முடிதிருத்தும் தொழிலாளியை ஊர் பஞ்சாயத்தில் காலணியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தப் பஞ்சாயத்தில் அவருக்கு வேறு வகையான அருவறுக்கத்தக்க தண்டனையும் வழங்கப்பட்டது. இச்சம்பவத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு ஜாதிய கொடுமைகளே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
பிகார் தலைநகர் பாட்னா அருகே அமைந்துள்ளது நாளந்தா மாவட்டம். அங்குள்ள ஆஸாத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். முடிதிருத்தும் தொழிலாளியான அவர், கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது கதவைத் தட்டி அனுமதி பெறாமல் வீட்டுக்குள் அவர் நுழைந்ததாகத் தெரிகிறது.
இதற்கு அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு அந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டது. அனுமதி பெறாமல் வீட்டுக்குள் நுழைந்ததற்குத் தண்டனையாக, வெளியில் துப்பிய உமிழ்நீரை மீண்டும் உட்கொள்ள வேண்டும் என்று மகேஷ் தாக்குரை பஞ்சாயத்து நடத்தியவர்கள் நிர்பந்தித்தனர்.
அதுமட்டுமன்றி, ஊர் பெண்களை வைத்து அவரை காலணியால் அடிக்கவும் செய்தனர். இச்சம்பவத்தை விடியோ எடுத்த சிலர், அதனை சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அதில் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனிடையே, வீட்டில் பெண்களும், வயதானவர்களும் இருந்தபோது மகேஷ் தாக்குர் உள்ளே நுழைந்ததால்தான் அத்தகைய தண்டனை வழங்கப்பட்டதாக ஊர் மக்கள் சிலர் நியாயம் கற்பித்துள்ளனர்.
நவநாகரீகமும், அறிவியல் தொழில்நுட்பமும் மேலோங்கி வரும் சமகாலத்தில் இன்னமும் இத்தகையச் சம்பவங்கள் நடப்பது வேதனை அளிப்பதாகத் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், ஜாதியக் கொடுமையின் உச்சமே இதுபோன்ற நிகழ்வுகள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த ஊர் இருக்கும் பகுதிக்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் இச்சம்பவம் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com