தீபாவளி பட்டாசு: காற்று மாசு பட்டியலில் பின்தங்கியது சென்னை

தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட காற்று மாசு பட்டியலில் தமிழகத்தின் சென்னை 9வது இடத்தைப் பிடித்துள்ளது.
தீபாவளி பட்டாசு: காற்று மாசு பட்டியலில் பின்தங்கியது சென்னை


லக்னௌ: தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட காற்று மாசு பட்டியலில் தமிழகத்தின் சென்னை 9வது இடத்தைப் பிடித்துள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் வெடித்த பட்டாசுகளால் ஏற்பட்ட காற்று மாசு குறித்து ஒவ்வொரு நகரங்களையும் தனித்தனியாக கணக்கெடுத்த மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

அதில், காற்று மாசடைந்த முதல் நகரமாக தில்லியும், அதற்கடுத்து மும்பையும் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் சென்னை 9வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு புது தில்லியில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டதாகக் கூறி, தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2030-ஆம் ஆண்டில் 60 ஆயிரம் பேர் மரணிப்பர்

பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் போகும்பட்சத்தில், 2030-ஆம் ஆண்டில் காற்றில் ஏற்படும் மாசுபடுதலால் இறப்போரின் எண்ணிக்கை 60 ஆயிரமாகவும், 2100-ஆம் ஆண்டில் 2.60 லட்சம் பேராகவும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

தீபாவளிக்குப் பிறகு நகரங்களில்...
தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, தில்லி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அத்தகவல்கள் கூறுகின்றன.

சென்னையைப் பொறுத்தமட்டில், தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு விற்பனை 40 சதவீதம் குறைந்தபோதிலும், காற்று மாசு பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தீபாவளி தினத்தன்று இரவில், காற்றில் மாசு அபாயகரமான அளவு இருந்துள்ளது. மும்பை, மாலேகான், நவிமும்பை ஆகிய இடங்களிலும் இதே நிலைதான். 

அண்மையில் பெய்த மழையின் தாக்கத்தினால், மும்பையில் கடந்த 3 ஆண்டு தீபாவளி பண்டிகை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு காற்று மாசுபடுதல் குறைந்திருந்ததாக புணேயைச் சேர்ந்த ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சிறுநீரகங்களைப் பாதிக்கும்

அமெரிக்காவின் மிசௌரியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத்தில் இயக்குநராக இருக்கும் ஜியாத்-அல்-ஆலி கூறியதாவது:

நாம் சுவாசிக்கும் காற்றானது, சுவாசக் குழாய் வழியாக, ரத்த நாளங்களுக்கு முதலில் செல்லும், பிறகு சிறுநீரகங்களுக்குச் செல்லும். நமது ரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய காரணிகளாகச் செயல்படும் சிறுநீரகங்கள், இந்த மாசை ரத்தத்தில் இருந்து வெளியேற்றும். இதுபோல், அதிகளவுக்கு மாசு வெளியேற்றப்படுவது சிறுநீரகங்கள் இயங்கும் திறனில் பாதிப்பைத் தரும். இதனால், சிறுநீரக நோய், மஞ்சள் காமாலை, ரத்த சுத்திகரிப்பு பாதிப்பு நோய் போன்ற நோய்கள் ஏற்படும்.

நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பான அளவைக் காட்டிலும், காற்றில் மாசு அளவு குறைந்திருந்தாலும், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்; இதிலிருந்து, காற்று மாசுவுக்கு, பாதுகாப்பான அளவு என்பதை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குழந்தைகளின் நினைவுத் திறன் குறையும்

காற்று மாசுபடுதலினால், குழந்தைகளின் நினைவுத் திறன் பாதிக்கப்படுவதும் புதிய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பள்ளிக்கு நடந்துச் செல்லும் 7 முதல் 10 வயது வரையுடைய 1,200 குழந்தைகள் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 12 மாதம் வரையிலும், குழந்தைகளின் செயல்படும் திறன், புரிந்து கொள்ளும் தன்மைகள் ஆராயப்பட்டன. 

அந்த காலக்கட்டத்தில், அக்குழந்தைகள் நடந்து செல்லும் பாதையில் நிலவிய காற்று மாசுபடுதலின் அளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது காற்று மாசுபடுதல் காரணமாக குழந்தைகள் நினைவுத் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது.

சுற்றுச்சூழல் சட்டங்கள் மறுஆய்வு

இந்தியாவில் கடந்த 2015-ஆம் ஆண்டில் காற்று, நீர் மாசுபாடு காரணமாக 25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுற்றுச்சூழல் சட்டங்களையும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் செயல்பாட்டையும் மறுஆய்வு செய்வதற்கு துணைச் சட்டங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
நாட்டின் தலைநகரான தில்லியிலும், இதர பெருநகரங்களிலும் மோசமான நிலையிலுள்ள காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்வதற்கு, நாடாளுமன்ற குழு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்துவதில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்த அளவுக்கு வெற்றி கண்டுள்ளது? காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உள்ள பங்கு, காற்று மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக அறிந்துகொள்ளவும் அந்த குழு முடிவு செய்துள்ளது.

தீபாவளி நாளில் பெரு நகரங்களில் காற்றின் தரக் குறியீடு (மைக்ரோ கிராம் அளவில்)

                   2017 2016
தில்லி      319 431
மும்பை  305 278
சென்னை 263 291

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com