ஐக்கிய ஜனதா தளம்: உள்கட்சித் தேர்தலை அறிவித்தது சரத் யாதவ் அணி

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் உள்கட்சித் தேர்தல் தேதியை, அக்கட்சியின் அதிருப்தி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் யாதவ் சனிக்கிழமை அறிவித்தார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் உள்கட்சித் தேர்தல் தேதியை, அக்கட்சியின் அதிருப்தி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் யாதவ் சனிக்கிழமை அறிவித்தார். மேலும், கட்சியின் இடைக்கால நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.
பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதீஷ் குமார் ஆட்சியமைத்ததை விரும்பாத சரத் யாதவ், தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்.
மேலும், அவரது அணி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சின்னத்தை தங்களுக்கே அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது. இதேபோல், நிதீஷ் குமார் அணியும், கட்சியின் சின்னத்தை தங்களுக்கு அளிக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மேலும், சரத் யாதவ், அனில் அன்வர் ஆகியோரை மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் நிதீஷ் குமார் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், தில்லியில் சரத் யாதவ், செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல், வரும் மார்ச் 11-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். மேலும் கட்சியின் இடைக்கால நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டார். அதன்படி, கட்சியின் செயல் தலைவராக சோட்டுபாய் வசவாவும், துணைத் தலைவர்களில் ஒருவராக அனில் அன்வர் செயல்படுவார் என்றும் அவர் கூறினார். இதுதவிர கட்சியின் மாநிலத் தலைவர்களின் பட்டியலையும் சரத் யாதவ் வெளியிட்டார்.
மாநிலங்களவைத் தலைவர் முன் நேரில் ஆஜராகுமாறு இரு எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் வந்திருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த விவகாரத்தை எங்கள் தரப்பு வழக்குரைஞர்கள் பரிசீலித்து வருகின்றனர் என்று அவர் பதிலளித்தார்.
மேலும், ""குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் தாமதம் செய்வது சரியல்ல. தேர்தல் ஆணையம், ஒரு நேர்மையான நடுவரைப் போன்று பாரபட்சமின்றி, நடுநிலையோடு செயல்பட வேண்டும்'' என்றும் சரத் யாதவ் 
கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com