'ஜிஎஸ்டி'-க்கு புது விரிவாக்கம் அளித்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

ஜிஎஸ்டி என்பதற்கு புது விரிவாக்கம் அளித்தார் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி. 
'ஜிஎஸ்டி'-க்கு புது விரிவாக்கம் அளித்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறை ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. இதற்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்று பெயரிடப்பட்டது.

இதன்மூலம் 0, 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்களின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவைகளின் மீதான வரி விதிக்கப்பட்டது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த மாபெரும் விழாவின் மூலம் துவக்கி வைத்தார்.

ஜிஎஸ்டி முறை நடைமுறைக்கு வந்தபின்னர் அதுதொடர்பான பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்துகொண்டு வருகின்றனர்.

இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த அனைத்து விதமான நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக சமீபத்தில் தில்லியில் நடந்து முடிந்த ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்துக்கு பின்னர் இதில் சில அதிரடி மாற்றங்களை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மேற்கொண்டார். அதன் அடிப்படையில் பல அடிப்படை பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரி குறைக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி மீதான அனைத்து விதமான குழப்பங்களும் விரைவில் தீர்க்கப்பட்டு அனைவருக்கும் சென்றடையும் விதமாக சுலபமாக்கப்படும் என மத்திய வருவாய்த்துறை செயலர் ஹாஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜிஎஸ்டி என்பதற்கு புதிய விரிவாக்கமும், விளக்கமும் அளித்தார் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

வலுவான இந்திய பொருளாதாரம் அமைவதற்கான வருங்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஜிஎஸ்டி. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியடைய அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் சுலபமாக சுயதொழில் செய்வதற்கு உதவும் விதத்தில் ஜிஎஸ்டி அமையும்.

நாடு முழுவதும் ஒரே வரி என்பது வளர்ச்சியின் குறியீடாகும். இதில் ஏற்படும் சில சிக்கல்கள் அவ்வப்போது ஆலோசிக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டு வருகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி திறமையாக செயல்படுத்தி வருகிறார். அனைவரும் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் ஆகியனவும் ஜிஎஸ்டி-யில் இணைப்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி மீதான அனைத்து நடைமுறை சிக்கல்களும் விரைவில் சீர்செய்யப்படும். வளர்ச்சியை நோக்கி நமது தேசம் பயணிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இனிவரும் காலங்களில் இந்தியா பொருளாதார ரீதியிலான வளர்ச்சியை அடையும்.

பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது போல ஜிஎஸ்டி என்பது சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) அல்ல இது ('good and simple tax') எளிமையான வரி விதிப்பு முறையாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com