பணமதிப்பிழப்பு நடந்து ஓராண்டு நிறைவு: நாட்டுக்கு நடந்த 5 நல்ல விஷயங்கள்

மத்திய அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரும் நவம்பர் 8ம் தேதியோடு ஓராண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், அதனால் ஏதேனும் நல்ல விஷயம் நடந்ததா என்றால் ஆம் என்பதே பதிலாகக் கிடைத்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடந்து ஓராண்டு நிறைவு: நாட்டுக்கு நடந்த 5 நல்ல விஷயங்கள்


மும்பை: மத்திய அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரும் நவம்பர் 8ம் தேதியோடு ஓராண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், அதனால் ஏதேனும் நல்ல விஷயம் நடந்ததா என்றால் ஆம் என்பதே பதிலாகக் கிடைத்துள்ளது.

பல்வேறு சாதக பாதகங்களை ஆராய்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புள்ள 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கம் செய்யப்பட்டன.

கருப்புப் பணத்தை மீட்பது, பயங்கரவாதிகளுக்குச் செல்லும் நிதியுதவியை தடுப்பது, போலி ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது என பல கோஷங்களோடு பண மதிப்பிழக்கம் கொண்டு வரப்பட்டது.

இதனால், சாதாரண ஏழை எளிய மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகினர். எல்லாவற்றையும் தாண்டி, மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்குக் கறுப்புப் பணம் கிடைக்கப்பெறவில்லை. பல கறுப்புப் பண முதலைகளுக்கு, வங்கியில் வரிசையில் நின்று பொதுமக்களுக்கு ஒரே ஒரு 2 ஆயிரம் ரூபாய் தாள் கிடைக்கும் முன்னே கட்டுக்கட்டாக பணப்பரிமாற்றம் நடந்து முடிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், பணமதிப்பிழக்கம் நடந்து ஓராண்டுக்குப் பின் அந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பார்க்கலாம்.

டிஜிட்டல் பணப்பரிமாற்றம்
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிப்பது என்ற மிகப்பெரிய கோஷத்தோடுதான் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்டது.  அந்த வகையில், கடந்த ஓராண்டுகளில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டிஜிட்டல் பரிமாற்றம் 22.4 மில்லியனில் இருந்து 2017ம் ஆண்டு மே மாத நிலவரப்படி 27.5 மில்லியனாக உயர்ந்துள்ளது. 

போலி நிறுவனங்கள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம், நாட்டின் பல வங்கிகளில் கணக்கு வைத்திருந்த 2 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. இதனால், போலி நிறுவனங்கள் பெயரில் இயங்கும் லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகள் மூலமாக பல ஆண்டுகளாக கறுப்புப் பணப் பரிமாற்றம் நடந்து வந்தது தடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, எந்த வணிகமும் மேற்கொள்ளாமல், வெறும் தொழில் நிறுவனம் என்று பெயரை பதிவு செய்து கொண்டு அந்த பெயரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி கறுப்புப் பணத்தை மாற்றி வந்த நிறுவனங்கள் தான் போலி நிறுவனங்களாகும்.

வரி விகிதம்

முன்கூட்டியே வரி செலுத்தும் நடைமுறையானது நன்கு வளர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே போல், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது. புதிதாக 56 லட்சம் பேர் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் இணைந்துள்ளனர். 

ஹவாலா பரிமாற்றம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஹவாலா பணப்பரிமாற்றம் முற்றிலும் முடங்கியது. அதன்பிறகும், ஹவாலா பணப்பரிமாற்றம் என்பது 50 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக ஹவாலா ஏஜெண்டுகளின் தொலைபேசி உரையாடலை கண்காணித்ததில் மத்திய புலனாய்வுத் துறைக்கு தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இந்தியா முழுவதும் பல ஹவாலா மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதே போல, ஜம்மு காஷ்மீர், சட்டீஸ்கர் போன்ற இடங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறைந்திருப்பதாகவும், பயங்கரவாதச் செயல்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.

உத்வேகத்தில் வங்கிப்பணிகள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் புழக்கத்தில் இருந்த 15.4 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன. 
 

புழக்கத்தில் இருந்த பணம் வங்கிக்குக் கொண்டுவரப்படுவது என்பது மிக நல்ல விஷயம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பொது மக்களின் கையில் இருக்கும் பணம், வங்கியில் வரவு வைக்கப்பட்டால் அவை தொழில்களுக்கு முதலீடு, கடனாகக் கொடுக்கப்பட்டு வட்டி பெறுவது என பயனுள்ளதாக மாற்றப்படும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2016 நவம்பர் மாதம் முதல் மார்ச் 2017 வரை வங்கிகளில் சுமார் ரூ.3.5 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டது.

பிரதம மந்திரி ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் வங்கிக் கணக்குகளில் மட்டும் ரூ.64,000 கோடி வரவு வைக்கப்பட்டதும், அந்த காலக்கட்டத்தில் மட்டும் 1.8 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோல பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நீங்கள் அடைந்த நன்மை அல்லது தீமைகள் மற்றும் வேறு என்னென்ன பயன்கள் கிடைத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களோ அதையும் இங்கே பதிவு செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com