பொருளாதார சீர்திருத்தம் சுனாமியை விட  மோசமானது: ப.சிதம்பரம்

பணமதிப்பீட்டு நடவடிக்கையை அமல்படுத்துவதற்குப் பதிலாக நிதியமைச்சர் பதவியை நாஜிநாமா செய்திருப்பேன் என ப.சிதம்பரம் சனிக்கிழமை தெரிவித்தார்.
பொருளாதார சீர்திருத்தம் சுனாமியை விட  மோசமானது: ப.சிதம்பரம்

மும்பையில் நடைபெற்ற உள்ளூர் வர்த்தகம் தொடர்பான பொருளாதார கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தவறான கொள்கை முடிவுகளை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பணமதிப்பீட்டு விவகாரம் உள்ளிட்டவை மிகப் பெரிய தோல்வி நடவடிக்கை ஆகும்.

சரக்கு மற்றும் சேவை வரி, பணமதிப்பீட்டு நடவடிக்கையில் இந்த அரசாங்கம் முறையற்ற அணுகுமுறையை கையாண்டு விட்டது. இது முற்றிலும் தவறான செயலாகும். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது இதில் இத்தனை வேகம் காட்ட வேண்டிய அவசியமில்லை. 

குறிப்பாக பணமதிப்பீட்டு விவகாரம் என்பது ஒரு தவறான முன்உதாரணமாக அமைந்துவிட்டது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியை பொறுத்தவரையில் அதனை அமலாக்குவதில் ஆவேசமாக செயல்பட்டு விட்டது.

ஜிஎஸ்டி முறையை நிதானமாக அமல்படுத்தி இருக்க வேண்டும். அதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு அதுகுறித்த புரிதலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இந்த ஜிஎஸ்டி கட்டமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

2004-ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பேரழிவான சுனாமியை விட இந்த மோடி அரசாங்கம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

எனது பிரதமர் மட்டும் இந்த பணமதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி கூறியிருந்தால் அது தவறானது என்று நான் எடுத்துக் கூறியிருப்பேன். அதையும் மீறி கட்டளையிட்டிருந்தால் நான் எனது நிதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்.

நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களும், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களும், மக்கள் தேவைகளும் இன்னும் எவ்வளவோ இருக்கும் நிலையில், இந்த புல்லட் ரயில் திட்டம் தேவையில்லாதது.

அகமதாபாத் முதல் மும்பை வரையிலான இந்த புல்லட் ரயிலில் சுமாராக 600 பேர் வரை பயணம் செய்வார்கள். அதற்காக ஜப்பான் அரசிடம் இருந்து இந்தியா மிகப்பெரிய தொகையை கடனாகப் பெற்றுள்ளது. இதுபோன்ற புல்லட் ரயில் திட்டங்களின் தேவைக்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். அப்போது இதனை இந்தியாவில் செயல்படுத்தி இருக்கலாம்.

அதற்கு மாறாக தற்போதையை அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், மருத்துவம், தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com