வீட்டுக் காவல் நீட்டிப்புக்கு எதிராக ஹஃபீஸ் சயீது மனு

மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதின் வீட்டுக் காவலை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கும் பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவை எதிர்த்து,
வீட்டுக் காவல் நீட்டிப்புக்கு எதிராக ஹஃபீஸ் சயீது மனு

மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதின் வீட்டுக் காவலை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கும் பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவை எதிர்த்து, அவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், குழப்பத்தை விளைவிக்கவும் மனுதாரர்கள் திட்டமிட்டுள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
எனினும், அந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு மனுதாரர்களின் காவல் நீட்டிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது மனுதாரர்களுக்கு எதிரான அரசின் தேவையற்ற பீதியைக் காட்டுகிறது. 
இந்த உத்தரவின்மூலம், பஞ்சாப் மாகாண அரசு வெளிப்படையான சட்ட மீறலில் ஈடுபட்டுள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் கடந்த 2008-ஆம் ஆண்டில் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஹஃபீஸ் சயீது மூளையாகச் செயல்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் லஷ்கர்-ஏ-தாய்பா பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டது. எனினும், ஜமாத்-உத்-தாவா என்ற புதிய பெயருடன் அந்த அமைப்பை ஹஃபீஸ் சயீது நடத்தி வந்தார்.
இந்த நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹஃபீஸ் சயீதையும், அவரது உதவியாளர்களான அப்துல்லா உபெய்த், மாலிக் ஜாஃபர் இக்பால், அப்துல் ரெஹ்மான் அபித், காஜி காஷிஃப் ஹுசைன் ஆகிய நால்வரையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கைது செய்து 90 நாள் காவலில் வைத்தது.
இதையடுத்து, ஹஃபீஸ் சயீதின் வீட்டுக் காவல் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பொது அமைதிக் காப்புச் சட்டத்தின் கீழ், அவர்களுக்கான காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், பஞ்சாப் மாகாண அரசு கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ஹஃபீஸ் சயீது மற்றும் அவரது உதவியாளர்களை மேலும் 2 மாதங்களுக்கு காவலில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எதிரான காவல் உத்தரவு கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் காலாவதியாதால், பொது அமைதிக் காப்புச் சட்டத்தின்கீழ் இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
காவல் காலம் முடிந்து ஹஃபீஸ் சயீதும், அவரது உதவியாளர்களும் விடுவிக்கப்பட்டால், பாகிஸ்தான் முழுவதும் குழப்பத்தை விளைவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். சயீதின் தலைமையில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஹஃபீஸ் சயீதின் விடுதலை நாட்டு அமைதிக்கும், ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
எனவே, சயீது மற்றும் அவரது உதவியாளர்களின் காவல், ஜூலை மாதம் 28-ஆம் தேதியிலிருந்து மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com