மத்திய அமைச்சரவையில் இடம்பெறாத ஐக்கிய ஜனதா தளம்: நிதீஷ் குமார் விளக்கம்

புதிய அமைச்சரவைப் பொறுப்பேற்பு விழாவில் ஜனதா தளம் பங்கேற்காதது தொடர்பாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை விளக்கமளித்தார்.
மத்திய அமைச்சரவையில் இடம்பெறாத ஐக்கிய ஜனதா தளம்: நிதீஷ் குமார் விளக்கம்

மத்திய அமைச்சரவை 3-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், மத்திய இணையமைச்சராகவும் இருந்த நிர்மலா சீதாராமன் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். மத்திய பாதுகாப்புத் துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். 

பாதுகாப்புத் துறையின் முழுநேர அமைச்சாரக பொறுப்பேற்ற முதல் இந்தியப் பெண் ஆவார். மேலும், இந்திரா காந்திக்குப் பிறகு அப்பதவியை வகிக்கும் 2-ஆவது பெண் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.

அதுபோல மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக பியூஷ் கோயல் பதவியேற்றார். நிதித்துறையின் இணையமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். 

இந்த அமைச்சவரவை விரிவாக்கத்தின் போது பீகாரில் ஆளும் ஜக்கிய ஜனதா தளம் இடம்பெறும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், புதிய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அக்கட்சியில் இருந்து யாரும் பதவியேற்கவில்லை. 


இதையடுத்து பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் கூறியதாவது:

இம்முறை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நான் சற்றே எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஏனெனில் இதில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறும் என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. 

எந்த முகாந்திரமும் இன்றி எனது கட்சியின் பெயர் இவ்விவகாரத்தில் வேண்டும் என்றே இழுக்கப்பட்டது. தற்போதைக்கு மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டிய அவசியமில்லை.

பீகாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. நாங்களும் மத்திய அமைச்சரவையில் எந்த இடமும் கேட்கவில்லை. 

இது முழுவதும் ஊடகங்களால் ஊதிப் பெரிதுபடுத்தப்பட்டது. வேறு எந்த காரணமும் இல்லை. பாஜக-வுடன் எங்கள் உறவு நல்ல முறையில் உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com