புதிய 200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்க 3 மாதங்கள் ஆகலாம்; ஏன்?

புதிய 200 ரூபாய் நோட்டை ஆர்பிஐ கடந்த மாதம் வெளியிட்டது. இது ஏடிஎம்கள் வாயிலாக பொதுமக்களுக்குக் கிடைக்க 3 மாதங்கள் ஆகலாம் என்று தெரிய வந்துள்ளது.
புதிய 200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்க 3 மாதங்கள் ஆகலாம்; ஏன்?


புது தில்லி: புதிய 200 ரூபாய் நோட்டை ஆர்பிஐ கடந்த மாதம் வெளியிட்டது. இது ஏடிஎம்கள் வாயிலாக பொதுமக்களுக்குக் கிடைக்க 3 மாதங்கள் ஆகலாம் என்று தெரிய வந்துள்ளது.

புதிதாக அச்சடிக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் 25ம் தேதி ஆர்பிஐ மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இது ஏடிஎம்களில் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

விரைவில் 200 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என்றும், ஏடிஎம்களில் 200 ரூபாய் வழங்குவதற்கு இதுவரை எந்த கால நிர்ணயமும் செய்யப்படவில்லை என்றும் ஆர்பிஐ அறிவித்திருந்தது.

இது குறித்து சில வங்கிகள், தங்களது ஏடிஎம்களை பராமரிக்கும் நிறுவனங்களிடம், புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கான வசதிகளை பரிசோதிக்குமாறு தற்போதுதான் அறிவுறுத்தியுள்ளது. 

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வழங்கும் வகையில், ஏடிஎம் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பத்தில் மாற்றத்தை மேற்கொண்ட நிலையில், தற்போது 200 மற்றும் புதிய 50 ரூபாய்களை ஏடிஎம்களில் வழங்கும் வகையில் அடுத்த மாற்றத்தை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஏடிஎம் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவது என்னவென்றால், 200 ரூபாய் நோட்டுகள் குறித்து ஆர்பிஐயிடம் இருந்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்  கிடைக்கவில்லை. சில வங்கிகளிடம் இருந்து மட்டுமே, பல்வேறு அளவுகளில் புதிய ரூபாய் நோட்டுகளை கூடுதலாக பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்துவது குறித்து பரிசோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது என்கிறார்கள்.

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள 2.25 லட்சம் ஏடிஎம்களிலும் புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும் வசதியை உருவாக்க வேண்டுமா என்பது கூட இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.

200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வழங்கும் வசதி குறித்து ஆர்பிஐயிடம் இருந்து உத்தரவு வந்த பிறகே அதற்கான பணிகள் முறைப்படித் தொடங்கும். அதிலும், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய ரூபாய் நோட்டு, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை விட அளவில் வேறுபட்டு உள்ளது. எனவே புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கப் பெற்றால்தான் அவற்றை ஏடிஎம்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற கேசட்டுகளை தயாரிக்க முடியும்.  மேலும், அந்த கேசட்டுகளில் தேவையான அளவுக்கு ரூபாய் நோட்டுகளை அடுக்கி அவை செயல்படுகின்றனவா என்பதையும் சோதிக்க வேண்டும் என்று ஏடிஎம் இயந்திரத் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனத்தின் நிர்வாகி கூறியுள்ளார். 

எனவே, இதுபோன்ற அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்து, ஏடிஎம்களின் பயன்பாடு பாதிக்காத வகையில் அவற்றை மாற்றியமைக்க 90 நாட்கள் ஆகும். இந்த மாற்றங்கள் செய்யப்படும் போது, வழக்கம் போல ஏடிஎம்கள் இயங்குவதையும், அதில் 100, 500, 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்குக் கிடைப்பதையும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் என்சிஆர் கார்ப்பரேஷன் 1,08,000 இயந்திரங்களையும், 6000 இயந்திரங்களை ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் டெக்னாலஜியும்,  4,500 இயந்திரங்களை பிடிஐ பேமென்ஸ்ட் நிறுவனமும் நிர்வகித்து வருகிறது.

இது குறித்து என்சிஆர் கார்ப்பரேஷன் தரப்பில் கூறப்படுவதாவது, சில வங்கிகளின் ஏடிஎம்களில் புதிய நோட்டுகளை வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணிகள் தொடங்கிவிட்டன. இன்னும் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெறவில்லை. எனவே பரிசோதனைப் பணிகள் அந்த அளவில் நிற்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறிப்பிட்ட சில ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளில் மட்டுமே 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன.

ஏடிஎம்களில் செய்ய வேண்டிய மாற்றம் 
தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஏடிஎம்களில் பொதுவாக 4 கேசட்டுகள் இருக்கும். அதில் மூன்று கேசட்டுகளில் மட்டுமே ரூ.100, ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வைக்கப்பட்டிருக்கும், ஒரு கேசட் காலியாகவே இருக்கும். ஒவ்வொரு கேசட்டிலும் 2000 முதல் 2500 என்ற எண்ணிக்கையில் நோட்டுகள் வைக்கப்படும். இப்படிப்பட்ட ஏடிஎம்களில் 4வது கேசட்டை 200 ரூபாய் நோட்டுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், ஏடிஎம்களைப் பயன்படுத்தும் நுகர்வோரின் அடிப்படையில் பல ஏடிஎம்களில் இரண்டு அல்லது மூன்று கேசட்டுகள் மட்டுமே இருக்கும். அவற்றில் கூடுதல் கேசட்டுகளை ஏற்படுத்த வேண்டிய கூடுதல் பணியும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com