மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை

வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்குத் தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தார்.
கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, தர்மேந்திர பிரதான் (இடமிருந்து வலம்) ஆகியோருக்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பதவி
கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, தர்மேந்திர பிரதான் (இடமிருந்து வலம்) ஆகியோருக்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பதவி

வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்குத் தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தார். 4 இணையமைச்சர்கள், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் துறை அமைச்சராக, நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே துறையின் புதிய அமைச்சராக, பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். 9 புதிய அமைச்சர்கள் உள்பட 13 பேர், அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு கூடுதலாக, நிதித் துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகிய 4 இணையமைச்சர்கள், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர, முன்னாள் அரசு அதிகாரிகள், முன்னாள் இணையமைச்சர்கள் உள்ளிட்ட 9 புதுமுகங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இதனால், மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை, 73-இல் இருந்து 76-ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அமைச்சர்களாக இருந்த கல்ராஜ் மிஸ்ரா, பண்டாரு தத்தாத்ரேயா, ராஜீவ் பிரதாப் ரூடி, சஞ்சீவ் குமார் பாலியான், ஃபக்கன் சிங் குலஸ்தே, மகேந்திர நாத் பாண்டே ஆகிய 6 பேர் தங்களது பதவிகளை கடந்த சில தினங்களுக்கு முன் ராஜிநாமா செய்தனர்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழுவில் நிர்மலாவுக்கு இடம்: வர்த்தகத் துறை தனிப்பொறுப்பு இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது. இந்திரா காந்திக்குப் பிறகு, அந்தத் துறைக்குப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் அமைச்சர் இவர் ஆவார். மேலும், பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பேற்கும் முதலாவது முழு நேர பெண் அமைச்சரும் இவரே ஆவார்.
பிரதமர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரைக் கொண்ட பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் இனி நிர்மலா சீதாராமனும் இடம்பெறுவார்.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்: நிலக்கரி, மின்சாரத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பாராட்டைப் பெற்ற பியூஷ் கோயலுக்கு, பல்வேறு விபத்துகளால் விமர்சனத்துக்குள்ளான ரயில்வே துறை வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு, தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிலக்கரித் துறை அமைச்சராக, பியூஷ் கோயல் தொடர்வார்.
பெட்ரோலியத் துறை அமைச்சராக, தர்மேந்திர பிரதானும், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக முக்தார் அப்பாஸ் நக்வியும் தொடருவார்கள். மேலும், இதற்கு முன்பு ராஜீவ் பிரதாப் ரூடியிடம் இருந்த திறன் மேம்பாட்டுத் துறை, தர்மேந்திர பிரதான் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
9 புது முகங்கள்...: புதுமுகமான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி ஹர்தீப் புரி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சராகவும், கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அல்போன்ஸ் கண்ணந்தானம் சுற்றுலாத் துறை இணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், நிதித் துறை இணையமைச்சராக சிவ பிரதாப் சுக்லா, சுகாதாரத் துறை இணையமைச்சராக அஸ்வினி குமார் செளபே, மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக வீரேந்திர குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித வள மேம்பாடு, நீர்வளம் மற்றும் கங்கை நதி தூய்மையாக்கல் துறை அமைச்சராக, மும்பை நகர முன்னாள் காவல் ஆணையர் சத்யபால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், அனந்த குமார் ஹெக்டேவுக்கு திறன் மேம்பாட்டு இணையமைச்சர் பொறுப்பும், கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு வேளாண் துறை இணையமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
துறைகள் மாற்றம்: உமா பாரதியின் வசம் இருந்த மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி தூய்மையாக்கல் துறை, மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் போதிய முன்னேற்றம் கிடைக்காததால், உமா பாரதியிடம் இருந்த துறை பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், மத்திய குடிநீர் மற்றும் பொது சுகாதாரத் துறை அமைச்சராக உமா பாரதி நீடிப்பார்.
நிதித் துறை இணையமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேக்வால், நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விஜய் கோயலிடம் இருந்த விளையாட்டுத் துறை, ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சராக, ராத்தோர் தொடர்வார். விஜய் கோயலுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அனில் மாதவ் தவே மறைவுக்குப் பிறகு, அவரது துறையைக் கவனித்து வந்த கேபினட் அமைச்சர் ஹர்ஷ வர்தன், அதே துறையைத் தொடர்ந்து கூடுதலாகக் கவனிப்பார்.
இதேபோல், குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு தேர்வான பிறகு, அவரது செய்தி, ஒலிபரப்புத் துறையைக் கவனித்து வந்த ஸ்மிருதி இரானி, அதே துறையைக் கூடுதலாகக் கவனிப்பார்.
தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு தனிப்பொறுப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
2019 தேர்தலை நோக்கி...: அமைச்சர்களின் முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையிலும், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டும், மத்திய அமைச்சரவையை பிரதமர் மோடி மாற்றி அமைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ள தர்மேந்திர பிரதான், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியவர் என்ற நற்பெயரைப் பெற்றவர். அதைப் பயன்படுத்தி, வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், ஒடிஸாவில் இருந்து கணிசமான இடங்களைப் பெறுவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
இதேபோல், கேரளத்தில் காலூன்றுவதற்கும் பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில், அல்போன்ஸýக்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம், அந்த மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் ஆதரவைப்பெற பாஜக திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com