ஆதார் பதிவு மையத்தை அமைக்காத வங்கிகளுக்கு இனி ரூ.20,000 அபராதம்

ஆதார் அட்டைக்காக மக்கள் பதிவு செய்து கொள்வதற்கான மையங்களை அமைக்காத வங்கிகள் அடுத்த மாதம் முதல் ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று இந்திய தனித்துவ அடையாள
ஆதார் பதிவு மையத்தை அமைக்காத வங்கிகளுக்கு இனி ரூ.20,000 அபராதம்

ஆதார் அட்டைக்காக மக்கள் பதிவு செய்து கொள்வதற்கான மையங்களை அமைக்காத வங்கிகள் அடுத்த மாதம் முதல் ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யூஐடிஏஐ) தலைவர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்தார்.
அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் தங்களது 10 கிளைகளுக்கு ஒரு கிளையில் ஆதார் பதிவுக்கான மையங்களை ஆகஸ்ட் மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனினும், பெரும்பாலான வங்கிக் கிளைகளில் ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படவில்லை. 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக யூஐடிஏஐ அமைப்பின் தலைவர் அஜய் பூஷண் பாண்டே, தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஆதார் பதிவு மையங்களை அமைப்பதற்கு தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் தேவை என்று வங்கிகள் கோரியிருந்தன. இந்தப் பதிவுக்கான பயோமெட்ரிக் கருவிகளைக் கொள்முதல் செய்வது, பதிவை மேற்கொள்ளும் முகமைகளை அடையாளம் காண்பது ஆகிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவை தெரிவித்தன. எனவே, வங்கிகளின் கோரிக்கையை ஏற்று அவற்றுக்கு இம்மாதம் (செப்டம்பர்) 30 வரை அவகாசம் அளித்துள்ளோம். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகும் ஆதார் பதிவு மையங்களை அமைக்காத வங்கிக் கிளையிடம் இருந்து மாதம்தோறும் ரூ.20,000 அபராதம் வசூலிக்கப்படும். 
ஒரு வங்கி 100 கிளைகளைக் கொண்டிருந்தால், அவற்றில் 10 கிளைகளில் ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், 10 கிளைகளில் 5 கிளைகளில் இந்த வசதியைச் செய்து விட்டு, மீதமுள்ள 5 கிளைகளில் இந்த வசதியைச் செய்யவில்லை என்றால் மொத்தமாக ரூ.1 லட்சத்தை முதல் மாதமே அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கடுத்த மாதங்களிலும் அவ்வாறு ஆதார் பதிவு செய்யும் வசதியைச் செய்து தராத கிளைகளுக்கு அபராதம் வசூலிக்கப்படும். 
வங்கி வளாகங்களில் ஆதார் பதிவு மையங்களை அமைப்பது என்பது மக்களின் வசதிக்காகவே செய்யப்படுகிறது. தற்போதுள்ள வங்கிக் கணக்குகளுக்கும் புதிய வங்கிக் கணக்குகளுக்கும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், வங்கிக் கிளைகளில் ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படுவதன் மூலம் மக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாமல் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என்றார் அவர்.
வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், ரூ.50,000 மற்றும் அதற்கும் மேற்பட்ட நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் தேவைப்படுகிறது. தற்போது வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களும் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை வங்கிகளிடம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் வங்கிக் கிளைகள் உள்ளன. யூஐடிஏஐ அமைப்பின் உத்தரவுப்படி, அவற்றில் 12,000 கிளைகளில் ஆதார் பதிவு மையங்களை அமைக்க வேண்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com